பா.ஜ.கவுக்கு படையெடுக்கும் பிரபலங்கள்- இசைக் கலைஞர் மோகன் வைத்யா பா.ஜ.கவில் இணைந்தார்.!
பா.ஜ.கவுக்கு படையெடுக்கும் பிரபலங்கள்- இசைக் கலைஞர் மோகன் வைத்யா பா.ஜ.கவில் இணைந்தார்.!

பிக்பாஸ் பிரபலமும் கர்நாடக இசைக் கலைஞருமான மோகன் வைத்யா பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் தலைமையில் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற பாடுபட போவதாகவும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் பணிகளை மாநிலத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட பிரதான கட்சிகள் தொடங்கிவிட்டன. அ.தி.மு.க சார்பாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பிரபலங்கள் இணைந்து வருகின்றனர்.
அண்மையில் காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்புவும் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்து பணியாற்றி வருகிறார். பா.ஜ.கவில் இணைந்த பிறகு அவர் காங்கிரஸ் கட்சியினை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கர்நாடக இசைக் கலைஞரும் பிக்பாஸ் பிரபலமான மோகன் வைத்யா பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார்.
மாநில தலைவர் எல்.முருகன் முன்னிலையில் இன்று கட்சியில் இணைந்த அவர் அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய போது 2021ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற தான் பாடுபடப் போவதாகவும் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்றும் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு பிரபலங்கள் பா.ஜ.கவில் இணைந்து வருவது மக்களிடையே கட்சிக்கு வரவேற்பு இருப்பதையும் வர உள்ள தேர்தலில் ஒரு விலக்க முடியாத சக்தியாக பா.ஜ.க உருவெடுத்து வருகிறது என்பதையுமே காட்டுவதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். இன்னும் பல பிரபலங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய இருப்பதாக மாநில தலைவர் எல்.முருகன் முன்னர் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.