தக்காளி கூடைக்குள் வெடிபொருட்கள்.. கேரளாவில் சிக்கிய 2 தமிழர்கள்.!
தக்காளி கூடைக்குள் வெடிபொருட்கள்.. கேரளாவில் சிக்கிய 2 தமிழர்கள்.!

மினி லாரியில் தக்காளி பெட்டிக்கு அடியில் வெடிபொருட்களை மறைத்து வைத்து கடத்தி சென்ற தமிழகத்தை சேர்ந்த இரண்டு பேரை கேரள மாநிலம் வாளையாறு பகுதியில் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாளையாறு சோதனை சாவடி அருகே கேரளா போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக தமிழகத்தில் இருந்து சென்ற மினி லாரியை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். ஓட்டுநரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின்னாக பதில் அளித்தாக தெரிகிறது.
இதனையடுத்து வாகனத்தை போலீசார் சோதனை மேற்கொண்டபோது தக்காளி கூடைக்கு அடியில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க பயன்படுத்தும் வெடிபொருட்கள் இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனை தொடர்ந்து ஓட்டுநர் பிரபு மற்றும் உதவியாளராக இருந்த ரவி ஆகிய இரண்டு பேரை கேரள போலீசார் கைது செய்தனர். மேலும் மினி லாரியில் இருந்த 7 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் மற்றும் 7 ஆயிரத்து 500 டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்தனர். இரண்டு பேரிடமும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தையடுத்து அவர்கள் தமிழகத்தின் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தகவல் கூறவில்லை.