Kathir News
Begin typing your search above and press return to search.

7.5% மருத்துவ உள்ஒதுக்கீட்டு இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே - முதல்வர் திட்டவட்டம்

7.5% மருத்துவ உள்ஒதுக்கீட்டு இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே - முதல்வர் திட்டவட்டம்

7.5% மருத்துவ உள்ஒதுக்கீட்டு இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே - முதல்வர் திட்டவட்டம்

Shiva VBy : Shiva V

  |  6 Nov 2020 7:39 PM GMT


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக நீலகிரி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் பாதிக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல தரப்புகளிலும் எழுந்த கோரிக்கையை ஒட்டி தமிழக அரசு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு என்று 7.5% இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் சட்டம் இயற்றியது.

பல பிரச்சனைகளுக்கு பின் இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி அளித்து அரசாகவும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் இந்த இட ஒதுக்கீட்டிற்கு தகுதி பெறும் வண்ணம் ஏற்பாடு செய்ய வேண்டுமென அரசு உதவி பெறும் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதற்கு அரசின் பதில் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுந்த நிலையில் "7.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம். இது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பொருந்தாது. அரசு உதவிபெறும் பள்ளிகளும் தனியார் பள்ளிகளே" என்று ஊட்டியில் கொரோனா தடுப்புப் பணிகளை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
தெரிவித்துள்ளார்.
முன்னதாக அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இந்த 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று மாநில தலைநகரங்களில் வரும் பத்தாம் தேதி கவனயீர்ப்பு போராட்டம் நடத்த தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது. அதேபோல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகள் இல்லாத பல இடங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான் மாணவர்களின் கல்வித் தேவையை பூர்த்தி செய்கின்றன எனவும் இந்தப் பள்ளிகளிலும் அதிக அளவில் ஏழை மாணவர்கள் பயில்கிறார்கள் என்பதால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வழக்கறிஞர் பினகோஸ் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்துள்ளார்.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News