வெள்ளிப் பல்லக்கில் இருந்த 2 கிலோ வெள்ளியைக் காணோம் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி.!
வெள்ளிப் பல்லக்கில் இருந்த 2 கிலோ வெள்ளியைக் காணோம் - காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி.!

கடந்த மாதம் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் சுவாமி வாகனங்கள் சரிபார்ப்பு பணி சரிவர நடக்கவில்லை என்று புகார் செய்யப்பட்ட நிலையில் தற்போது வெள்ளி பல்லக்கில் இருந்தா தகடுகள் நீக்கப்பட்டு மரப் பகுதி மட்டுமே இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் பக்தர்களின் தொடர் வேண்டுகோளுக்கு இணங்க கடந்த மாதம் தங்க, வெள்ளி நகைகள் மற்றும் சுவாமி வாகனங்களை சரிபார்க்கும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆய்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று பக்தர் ஒருவர் இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு புகார் அனுப்பினார். விலை மதிக்க முடியாத பழமையான வைர, வைடூரிய, தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களும் வெள்ளி வாகனங்களும், பல்லக்கும், ஒன்பது உண்டியல்களும் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமாக உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவற்றில் பழமை வாய்ந்த கல் இழைத்த தங்கவேல், சுப்பிரமணியரின் வெள்ளி கிரீடம், கல் இழைத்த பலகை, தங்கமுலாம் பூசிய கிரீடம் மற்றும் 11 கிலோ எடையுள்ள வெள்ளிப் பல்லக்கு ஆகியவையும் அடங்கும். இதில் சிலவற்றில் நகைகளை உடைத்து அவற்றில் இருக்கும் விலை உயர்ந்த வைரம், வைடூரியம், மாணிக்கம் உள்ளிட்ட கற்களை எடுத்து அதற்கு பதிலாக போலிக் கற்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் ஆய்வில் ஈடுபடும் போது வீடியோ பதிவு செய்யப்படவில்லை என்றும், பக்தர்கள், பொதுமக்கள், மனுதாரர்கள், பிரதிநிதிகள் என யாரையும் ஆய்வை பார்வையிட அனுமதிப்பதில்லை என்றும், இது குறித்து முறையான அறிவிப்பும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டி அறநிலையத்துறை இணை ஆணையருக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு வெளிப்படைத்தன்மை இன்றி ஆய்வு நடப்பது தவறுகளை மறைக்கும் முயற்சி நடக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று கூறி ஆய்வு வெளிப்படையாக நடக்கவும் சுவாமி திருமேனிகள் உட்பட கோவிலுக்கு சொந்தமான அனைத்தையும் ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் இந்த புகார் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது பக்தர்களும் செய்தியாளர்களும் அதை பார்வையிட அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த ஆய்வின்போது நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த வெள்ளிப் பல்லக்கு எடை பார்க்கப்பட்டது. அப்போது முன்னர் சோதனை செய்தபோது 11 கிலோ எடை இருந்த வெள்ளித் தகடுகள் தற்போது 8 கிலோ மட்டுமே இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. நுணுக்கமான, அழகான வேலைப்பாடுகள் கொண்ட பல்லக்கில் பொருத்தப்பட்டுள்ள வெள்ளித் தகடுகள் காணாமல் போயிருப்பதாகவும் அவற்றில் சில உடைக்கப்பட்டு விலை உயர்ந்த கற்கள் திருடப்பட்டு அதற்கு மாற்றாக போலிக் கற்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் பக்தர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது.அறநிலையத்துறை தரப்பில் கடந்த 1954 ஆம் ஆண்டு கடைசியாக ஆய்வு செய்தபோது அதில் உள்ள வெள்ளி தகடுகளின் எடை 11 கிலோ இருந்ததாகவும் இப்போது நடந்த ஆய்வின் போது 8.8 கிலோ மட்டுமே இருப்பது தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அறநிலையத் துறை ஆணையருக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவரே முடிவு செய்வார் என்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன் இதே ஏகாம்பரநாதர் கோவிலில் தான் சோமாஸ்கந்தர் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து தங்கம் பெற்றுவிட்டு சிலை செய்வதில் மோசடி செய்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.