Kathir News
Begin typing your search above and press return to search.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய முட்டுக்கட்டை போடுவது யார்?

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய முட்டுக்கட்டை போடுவது யார்?

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைய முட்டுக்கட்டை போடுவது யார்?
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  12 Nov 2020 1:01 PM IST

வாழ்க்கையில் சில பல போராட்டங்கள் இருக்கலாம்; போராடுவதே வாழ்க்கையாகி விடக் கூடாது. ஆனால் தமிழகத்தில் இப்போதைய நிலை அது தான். வளர்ச்சித் திட்டம் என்று எதைக் கொண்டு வந்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களைப் போராட்டத்திற்கு தூண்டி விடுவதே குறிப்பிட்ட சில நபர்கள், அமைப்புகளின் வேலையாகி விட்டது. நீதிபதிகளே "மக்களை சமூக ஆர்வலர் என்ற பெயரில் சிலர் எப்போதும் போராட்ட மனநிலையில் இருக்கச் செய்கின்றார்கள்" என்று வருத்தப்பட்டு வெளிப்படையாக பேசும் அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

மீத்தேன், இயற்கை எரிவாயு, கெயில், எட்டுவழிச் சாலை மற்றும் லேட்டஸ்டாக உயர்மின் அழுத்த கம்பிகள் பதிப்பது உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த மாதிரி போராட்டங்கள் மூலம் எதிர்ப்பு தெரிவித்து அவற்றை செயல்படுத்த விடாமல் செய்த பெருமை தமிழகத்துக்கு உண்டு. மீத்தேன் திட்டத்தால் புதுக்கோட்டை மாவட்டம் கதிராமங்கலத்தில் கிராமத்தினர் பலருக்கு புற்றுநோய் ஏற்படுவதாகக் கூறி திட்டம் எதிர்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர்களது நிலை என்ன, திட்டம் செயல்படுத்தப்படாத நிலையில் கிராமத்தில் சுகாதாரம் எப்ப்டி இருக்கிறது என்பது பற்றி எந்தத் தகவலையும் போராட்டங்களைத் தூண்டி விட்டவர்கள் பொது வெளியில் வெளியிட்டதாகத் தெரியவில்லை. இதிலிருந்தே இவர்களது நேர்மையையும் நோக்கத்தையும் உணர்ந்து கொள்ளலாம் என்ற போதும் இந்த மாதிரியான பொய்ப் பிரச்சாரங்களுக்கு மக்கள் இன்னும் மயங்கத் தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் இப்போது புதிதாக ஒரு எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி இருக்கிறது. தற்போதைய தெலுங்கானா மாநில ஆளுநர் டாக்டர்.தமிழிசை சவுந்தரராஜன் தமிழக பா.ஜ.க தலைவராக இருந்தபோது தொடர்ந்து பலமுறை தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதன் பயனாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் குலசேகரப்பட்டினம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஆய்வு செய்து ராக்கெட் ஏவுதளம் அமைக்க சரியான இடத்தை தேர்வு செய்தனர். இந்தியாவின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் மட்டுமே ராக்கெட் ஏவுதளம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டபோது இந்த விஷயத்திலும் தி.மு.க செய்த தில்லாலங்கடி வேலைகள் வெளிச்சத்துக்கு வந்தன. ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் முன்பு அப்போது விஞ்ஞானி விக்ரம் சாராபாய் தலைமையில் செயல்பட்ட இஸ்ரோ தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்போதைய தி.மு.க அரசு கமிஷன் கேட்டதால் வெறுத்துப்போன இஸ்ரோ தமிழகத்தில் ஏவுதளம் அமைக்கும் முடிவை கைவிட்டதாகவும் உண்மைகள் வெளிப்பட்டன. அதன்பின்னர் பல ஊழல்கள் செய்து விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்யும் கட்சி என்று பெயர் பெற்ற தி.மு.க அந்தப் பெயரை நிலைநாட்டும் வகையில் இன்றளவும் வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அந்த வரிசையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் திட்டத்தையும் தி.மு.க விட்டு வைக்கவில்லை. ஏற்கனவே தென் தமிழக கடலோர பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வர குறிப்பிட்ட மதத்தினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து மதகுருமார்கள் மூலம் பொதுமக்களை திரட்டி போராட்டம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இத்தகைய போராட்டங்களில் அவர்களது ஈடுபாடும் அதற்காக அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோதே வெளிப்படையாகத் தெரிவித்ததை ஊரறியும். 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைத்த பின் கொண்டுவரப்பட்ட குளச்சல் துறைமுகம் மற்றும் சாகர்மாலா திட்டம் உள்ளிட்டவற்றுக்கும் இவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

ஆய்வு செய்யச் சென்ற அதிகாரிகளை சிறைபிடித்து தாக்கிய சம்பவங்கள் எல்லாம் இதில் அடக்கம். இப்போதும் ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி இறங்குதளம் ஆகியவற்றை அமைப்பதற்கு எதிராக அதே போன்ற போராட்டங்களை தொடங்கும் முயற்சியாக மணப்பாடு பகுதியில் மீனவர்களை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். கடந்த ஆண்டு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு ஆதரவாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க எம்.பி கனிமொழியும் இப்போது இவர்களுடன் சேர்ந்து கொண்டு ராக்கெட் ஏவுதளம் அமைப்பதை எதிர்த்து வருவதாகத் தெரிகிறது.

விவசாயமும் மீன்வளமும் பாதிக்கப்படும் என்றும் மக்கள் நிம்மதியாக வாழ இயலாது என்றும் ஆதாரமற்ற அச்சங்களை மக்கள் மனதில் விதைத்து இந்த வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதன் முன்னோட்டமாகவே குலசேகரபட்டினத்தை ஒட்டியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஆட்சியர் வந்து சந்திக்கும் வரை மீன்பிடிக்க கடலுக்குச் செல்வதில்லை என்று வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இத்தகைய போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் இயங்கும் அமைப்புகளின் தேச விரோத நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் முடக்க வேண்டும் என்பதே உண்மையான சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News