விஜய் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த அவர் தந்தை - பின்னணியில் யார் ?
விஜய் பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்த அவர் தந்தை - பின்னணியில் யார் ?

நடிகர் விஜய் முதன்முதலாக தனது அரசியல் விருப்பத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஆசையை தூண்டிய ஒரு நிகழ்ச்சியாக சர்க்கார் பட பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியை கூறலாம். அப்போதே அந்த மேடை ஒரு அரசியல் வாடையை வீசியது. நீண்ட உயரத்தில் வைக்கப்பட்ட மைக் ஏதோ பெரிய அரசியல் தலைவர்கள் முன்பாக வைக்கப்படும் மைக் போல இருந்தது.
மைக்கை பிடித்த விஜய் எப்போதும் போல இல்லாமல் என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிருக்கு உயிரான ரசிகர்களே " என அவர் பேசத் தொடங்கினார். அடுத்து அவர் பேச ஆரம்பிக்கையில் ``இந்தத் தேர்தல்ல எல்லாம் போட்டியிட்டு, பிரசாரம் பண்ணி ஜெயிச்சு..., அதுக்கப்புறம் `சர்க்கார்ன்னு' அமைப்பாங்கள்ல.. ஆனா, நாங்க முதல்ல சர்கார் அமைச்சுட்டு தேர்தல்ல நிக்கப்போறோம்" என்று கூறினார்.
அது மட்டுமல்லாமல் ``உண்மையாகவே முதலமைச்சரானா, முதலமைச்சரா நான் நடிக்க மாட்டேன், ஒருவேளை முதலமைச்சரானால், முதல் விஷயமாக ஊழல், லஞ்சத்தை ஒழிப்பேன்" என்றதுடன், அதுகுறித்த ஒரு குட்டிக் கதையையும் கூறினார்.
விஜய்யின் இந்த நிகழ்ச்சிதான் அவருடைய அரசியல் பிரவேசத்தில் அவருக்கு இருக்கும் ஆசையை வெளிப்படுத்தியது. அதன் பிறகு தனது பிறந்த நாளில் மற்ற கட்சிகளின் ஸ்டைலில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கூட்டம் கூட்டி தனக்கு பின்னாலும் ஒரு கூட்டம் உண்டு என்பதை தமிழகத்துக்கு காட்டினார். அடுத்து மெர்சல் படம் வந்ததும் ஒரு நாள் வசூலில் விஜய், ரஜினியின் கபாலியை விஞ்சிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடினர்.
அதன்பிறகு ரஜினிக்கு போட்டியாக ஒரு இமேஜ் விஜய்க்கு உருவாக்கப்பட்டது. ஆனால் ரஜினி காந்த் கூறுகையில் "ஒரு வெற்றிடம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது. கீழே இருந்து மேலே வரை அரசியலிலும், அரசிலும் சுத்தம் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது என்றார். நான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும், மாநில சட்டசபை தேர்தலின்போது வருவேன்" என்றும் 3 ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்படையாக கூறியிருந்தார்.
இதற்கான கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தியதும் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதிலுமுள்ள ரசிகர்களையும், பிறகட்சி உறுப்பினர்களையும் தனது அமைப்பிற்குள் கொண்டு வரும் வகையில் இணைய தளம் மூலமும், நேரடி முகாம்கள் மூலமும் உறுப்பினர்கள் சேர்த்தார்.
ஆனால் விஜய் அவ்வாறெல்லாம் இன்னமும் செய்யவில்லை. தன்னை வெளிப்படையாக மக்களுக்கு அறிமுகப்படுத்த தயங்கி வருகிறார். நேரடியாக களத்தில் இறங்கவும் பயப்படுகிறார் என்றும், தனக்கு இன்னும் சினிமா வாய்ப்புகள் உள்ளன, நிறைய சம்பாதிக்க வாய்ப்புள்ளபோது பெரிய ஜாம்பவான்களுடன் மோதி இரண்டும் கெட்டான் நிலைக்கு ஆளாகக் கூடாது என அவர் நினைப்பதகாக சிலர் கூறுகின்றனர்.
ஆனால் அவருடைய தந்தை சந்திரசேகர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மறைமுகமாக உதவ அவரை அரசியலில் இறக்கிவிட முனைவதாகவும் சிலர் பேசினர். மேலும் அவர் தனது மகனுக்காக அரசியல் கட்சி தொடங்க டெல்லி சென்று ஏற்பாடு செய்துள்ளதாகவும் வதந்திகள் பரப்பி விட்டனர்.
ஆனால் சந்திரசேகர் இரு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் " விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்ற செய்தி மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் 'அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்' என்ற பெயரில் நான் ஒரு அமைப்பைத்தான் பதிவு செய்தேன் 1993-ல் ரசிகர் மன்றமாக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இது. சமூக சேவை நோக்கத்துக்காக மட்டுமே இதை மறு பதிவு செய்திருக்கிறேனே தவிர, வேறு எதுவும் கற்பனை செய்துவிடாதீர்கள், வேறு ஏதாவது கேட்க வேண்டுமென்றால் விஜய்- இடமே கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறினார்.
சிலர் விஜய்யின்விருப்பம் இல்லாமலே அவரது தந்தை செயல்படுவதாகவும் இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே லடாய் எனவும் கூறுகின்றனர். இது குறித்து பொதுவான சிலர் கூறுகையில் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என்ற எண்ணத்தில் உள்ள சில சக்திகள் இவ்வாறு விஜய்பெயரை பயன்படுத்துவதாகவும், ரஜினி ஒரு வேளை அரசியலுக்கு வந்து விட்டால் விஜயை வரும் தேர்தலில் ஒரு ஆயுதமாக பயன்படுத்த அவர்கள் திரை மறைவில் முயன்று வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் விஜய் அந்த சக்திகளுக்கு உதவி தனது இமேஜை கெடுத்துக் கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.
அதே சமயம் அரசியலில் உண்மையில் விருப்பமில்லாத விஜய் சினிமா ரிலீஸ் ஆகும்போது மட்டும் ரசிகர்களுக்கு அரசியல் ஆசையை காட்டி வசூல் வேட்டை ஆடுவது நல்லதல்ல , அஜீத் போல் ஜென்டிலாக நடந்து கொள்ள வேண்டியதுதானே எனவும் கூறுகின்றனர்.