இளைஞர்களே... வீடடங்குங்கள்: நோயையும் வாங்கி, வாழ்க்கையையும் தொலைக்காதீர்.!
இளைஞர்களே... வீடடங்குங்கள்: நோயையும் வாங்கி, வாழ்க்கையையும் தொலைக்காதீர்.!;

இளைஞர்களே... வீடடங்குங்கள்: நோயையும் வாங்கி, வாழ்க்கையையும் தொலைக்காதீர்!
தமிழ்நாட்டில் இரண்டாம் கட்ட ஊரடங்கு நடைமுறைக்கு வந்து, இன்றுடன் இரண்டு நாட்களாகிவிட்ட நிலையில், அதை மதிக்காமல் பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடுவது அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. ஊரடங்கை மீறுவோர் மீது தொற்றுநோய் சட்டப்படி தொடரப்படும் வழக்குகள் சம்பந்தப்பட்டோரின் எதிர்காலத்தை பாழாக்கிவிடும் என்பதால் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் நாடு முழுவதும் கடந்த மாதம் 24-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு ஆணை, மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. உள்ளூர் காவலர்கள் முதல் மாநில முதலமைச்சர், பாரதப் பிரதமர் வரை அனைவரும் ஊரடங்கை மதித்து நடக்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறார்கள். நானும் இது தொடர்பாக தொடர்ந்து அறிவுரைகளை வழங்கி வருகிறேன். ஆனால், ஊரடங்கை மீறி சாலைகளில் சுற்றுவோர் எண்ணிக்கையும், பொது இடங்களில் குவிவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று காலை காய்கறி வாங்குவதற்காக பெருமளவில் மக்கள் குவிந்திருக்கின்றனர். அவர்களிடையே சமூக இடைவெளி என்ற உணர்வு சிறிதும் இல்லை. நாட்டில் வேறு எங்குமே காய்கறி இல்லை என்பது போல, கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்க மக்கள் முண்டியடித்தது அச்சத்தை ஏற்படுத்துகிறது. சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதே நிலை தான் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இவர்கள் காய்கறிகளை வாங்குவதுடன், கொரோனாவையும் சேர்த்து வாங்குகின்றனர் என்பது தான் உண்மை.