அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.!
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை அலங்காநல்லூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகின்ற ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைக்கின்றனர்.
தமிழர்களின் மிக முக்கிய பண்டிகையாக விளங்குவது பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையின்போது நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். ஜல்லிக்கட்டு போட்டியானது அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட இடங்களில் பிரபலமாக நடைபெறும்.
இந்த முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற சந்தேகம் இருந்து வந்த நிலையில் தமிழக அரசு சமீபத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது. இதன் காரணமாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை மாடுகளை தயார் செய்து வருகின்றனர்.
வருகின்ற 14ம் தேதி அவனியாபுரத்தில், 15ம் தேதி பாலமேட்டிலும், 16ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என்றும் அரசு கூறியிருந்தது.
இந்நிலையில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ஆய்வு செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஜனவரி 16ம் தேதி முதலமைச்சர், துணை முதலமைச்சர் இருவரும் தொடங்கி வைக்கின்றனர் என்று தெரிவித்தார்.