Kathir News
Begin typing your search above and press return to search.

நகைச்சுவைக் காட்சிகளில் நடிப்பது எளிதல்ல: ராஷ்மிகா மந்தனா

நகைச்சுவைக் காட்சிகளில் நடிப்பது எளிதல்ல: ராஷ்மிகா மந்தனா
X

Suresh JangirBy : Suresh Jangir

  |  10 Jan 2020 4:28 PM IST

நகைச்சுவைக் காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

அனில் ரவிபுடி இயக்கத்தில் மகேஷ் பாபு, ராஷ்மிகா மந்தனா, விஜயசாந்தி, பிரகாஷ்ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சரிலேரு நீக்கெவரு'. நாளை (ஜனவரி 11) வெளியாக உள்ள இந்தப் படத்துக்குத் தெலுங்கு திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்தப் படத்துக்காக மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பிரம்மாண்டமான கட்-அவுட்கள், மேள தாளங்கள் என அதிரடியாகத் தயாராகி வருகிறார்கள். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இந்தப் படத்தில் முழுக்க காமெடி கலந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. ட்ரெய்லரில் இடம்பெற்ற இவரது வசனங்களுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

தனது கதாபாத்திர வடிவமைப்பு குறித்தும், மகேஷ் பாபுவுடன் நடித்தது குறித்து ராஷ்மிகா மந்தனா கூறியதாவது:

"என்னால் ரசிகர்களைச் சிரிக்க வைக்க முடியும் என்று நினைத்ததே இல்லை. எனது முதல் தெலுங்குப் படம் 'சலோ'வில் நடிக்கும் போது, இங்கு மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா என்பதைத் தான் பார்த்தேன். 'கீத கோவிந்தம்' படத்தைப் பொறுத்தவரை, எப்போதும் கோபமாக, கடுப்பாக இருக்க வேண்டும். நான் நிஜ வாழ்க்கையில் அப்படிக் கிடையாது. நிஜத்திலும் நான் அப்படி மாறி வருகிறேன் என்று நண்பர்கள் சொன்னார்கள்.

'டியர் காம்ரேட்' படத்தில் கொஞ்சம் அதிகமாக அழுதேன். 'சரிலேரு நீக்கெவரு' படத்தில் சிரிக்க வாய்ப்பு கிடைத்தது. அனைவரையும் சிரிக்க வைப்பேன் என நம்புகிறேன். நகைச்சுவைக் காட்சிகளில் நடிப்பது அவ்வளவு எளிதல்ல. நம் உடலை நிறைய அசைக்க வேண்டும். இயக்குநர் அனில் ரவிபுடி எனக்கு உதவினார்.

நான் முன்னரே பெரிய படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் அப்போது உடன் நடித்தவர்கள் நண்பர்களைப் போல. மகேஷ் பாபு, விஜயசாந்தி போன்ற பெரிய நடிகர்களுடன் நடிக்க வேண்டும் என்ற சிந்தனையே எனக்குப் பதற்றத்தைத் தந்தது. என்ன செய்வது என்று யோசித்தவாறுதான் நடிக்க ஆரம்பித்தேன்.

அவர்களுடன் பேசினேன். அவர்கள் நடிப்பு வாழ்க்கையை எப்படிக் கட்டமைத்தார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். அவர்களும் ஒரு கட்டத்தில் புதியவர்கள்தான். சாதாரண மக்களைப் போலத்தான் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர்கள் மீது எனக்குப் பெரிய மரியாதை இருக்கிறது.

மெதுவாகப் படப்பிடிப்பில் நான் நானாக இருக்க ஆரம்பித்தேன். மகிழ்ச்சியாக இருந்தேன். என் வயதுக்கு மீறி முதிர்ந்தவளாக அவர்களுக்கு முன் காட்டிக்கொள்ளவில்லை. எந்த ஐஸ்க்ரீம் நன்றாக இருக்கும் என்பது வரை நாங்கள் பேச ஆரம்பித்தோம்".

இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News