Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கிடைத்த ஆயுள் தண்டனை - ஓர் அலசல்

காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கிடைத்த ஆயுள் தண்டனை - ஓர் அலசல்

காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமாருக்கு கிடைத்த ஆயுள் தண்டனை - ஓர் அலசல்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 Dec 2018 12:04 PM GMT

இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ந் தேதி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் மூண்டது. வட மாநிலங்களில் பல இடங்களில் சீக்கியர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டனர். அதன்படி டெல்லியின் ராஜ்நகரில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், அங்குள்ள குருத்வாரா ஒன்றும் தீக்கிரையாக்கப்பட்டது. தலைநகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.


குறிப்பாக அப்போது காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த சஜ்ஜன் குமார் (வயது 73), கவுன்சிலர் பல்வான் கோகர், ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி பாக்மல், கிரிதாரி லால் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களான மகேந்தர் யாதவ், கிஷான் கோகர் ஆகிய 6 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.சஜ்ஜன் குமார் மீது கொலை, கொலைச்சதி, வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த உள்ளூர் கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.இதில் காங்கிரஸ் தலைவர் சஜ்ஜன் குமார் விடுதலை செய்யப்பட்டார். பல்வான் கோகர், பாக்மல், கிரிதாரி லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், யாதவ், கோகர் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது.

ஆனால் சஜ்ஜன் குமார் விடுதலையை எதிர்த்தும், மற்ற குற்றவாளிகளின் தண்டனையை அதிகரிக்கக்கோரியும் டெல்லி ஐகோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் மேல்முறையீடு செய்தனர். இதை நீதிபதிகள் முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.இதில் சஜ்ஜன் குமாரின் விடுதலையை ரத்து செய்த நீதிபதிகள், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். தனது வாழ்நாள் முழுவதையும் சஜ்ஜன் குமார், சிறையிலேயே கழிக்க வேண்டும் என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். இதற்காக 31-ந் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் எனக்கூறிய நீதிபதிகள், அதுவரை டெல்லியை விட்டு வெளியேறக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.



இதைப்போல பல்வான் கோகர், பாக்மல், கிரிதாரி லால் ஆகியோரின் ஆயுள் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகள், மீதமுள்ள இருவருக்கான சிறைத்தண்டனையை 10 ஆண்டுகளாக அதிகரித்தும் உத்தரவிட்டனர். இவர்களையும் 31-ந் தேதிக்குள் சரணடைய உத்தரவிட்ட நீதிபதிகள், அதுவரை டெல்லியில் இருந்து வெளியேறவும் தடை விதித்தனர்.அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மனிதநேயத்துக்கு எதிராக குற்றம் இழைக்கப்பட்டு இருப்பதாக கூறிய நீதிபதிகள், உண்மையும், நீதியும் ஒருநாள் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தனர்.1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 34 ஆண்டுகளுக்குப்பின் நீதி வழங்கப்பட்டதற்கு பா.ஜனதா, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று உள்ளன. இந்த தீர்ப்பு திருப்தி அளிப்பதாக சிரோமணி அகாலிதளம் கட்சித்தலைவர்களில் ஒருவரான மஜிந்தர் சிங் சிர்சா கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News