Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி

தமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி

தமிழகத்தில் வீட்டு வசதி திட்டங்களுக்காக மட்டும் சுமார் ₹22,762 கோடி நிதி ஒதுக்கீடு, தண்ணீர் பிரச்சனையை போக்க பலே திட்டம் : மோடி சர்க்கார் அதிரடி

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Jun 2019 8:07 PM GMT


பிரதமரின் வீட்டுவசதி திட்டம், அம்ருத் மற்றும் பொலிவுறு நகரம் ஆகிய திட்டங்கள், தமிழ்நாட்டில் முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


தில்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நடத்திய ஆலோசனையில் தமிழகத்தின் சார்பில் கூடுதல் தலைமை செயலாளரும், தமிழ்நாடு நகர்ப்புற நிதி வசதி மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான திரு. அசோக் டோங்ரே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் திரு.ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய நிர்வாக இயக்குனர் திரு.எம்.எஸ்.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த ஆலோசனைக்கு பின் மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த தகவலில், அம்ருத் எனப்படும் அடல் நகர்ப்புற மறுசீரமைப்பு மற்றும் மாற்றத்திற்கான திட்டத்திற்காக தமிழ்நாட்டிற்கு அதிகபட்சமாக ₹11,441.34 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் மத்திய அரசின் பங்காக ₹4,763.59 கோடியும், தமிழக அரசின் பங்காக ₹2,300.44 கோடியும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பங்காக ₹4,377.31 கோடியும் செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் தமிழகத்தில் 445 திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. ஈரோடு, திருப்பூர், ஓசூர், வேலூர், ஆம்பூர், கோவை, மதுரை, ராஜபாளையம், நாகர்கோவில் மற்றும் கும்பகோணம் ஆகிய நகரங்களில் 18 பெரிய குடிநீர் விநியோகத் திட்டங்கள் ₹6,495.75 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையை அடுத்த நெம்மேலியில் 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்புத் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் நிலையமும், சவ்வூடு பரவல் முறையிலான இரண்டு துணை சுத்திகரிப்பு நிலையங்களும் அமைக்கப்பட உள்ளன. இது தவிர, சென்னையில் மாத்தூர், மடிப்பாக்கம், ஜல்லடியான்பேட்டை, உத்தண்டி மற்றும் வளசரவாக்கம் ஆகிய இடங்களிலும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. கோயம்புத்தூரிலும் அம்ருத் திட்டத்தின் கீழ் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யவும் மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிநீர் வழங்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படும்.


மேலும் சென்னை. கோவை, திருச்சி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் வேலூர் மாநகராட்சிகளிலும், ராஜபாளையம் மற்றும் ஆம்பூர் நகராட்சிகள், வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியிலும் ₹4,713.21 கோடி செலவில் பாதாள சாக்கடை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அத்துடன், அம்ருத் நகரங்களில் 409 பசுமைவெளி மேம்பாடு/பூங்கா அமைக்கும் திட்டங்களும் ₹232.38 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


பொலிவுறு நகரங்கள் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, கோவை உட்பட 11 மாநகராட்சிகளுக்குட்பட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை தியாகராயநகரில் நடைபாதை வளாகங்கள் அமைக்கும் பணியும், கோவையில் 8 நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகளும், மதுரையில் சுற்றுலா சார்ந்த கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களும், திருச்சியில் மலைக்கோட்டை சுற்று வட்டார மேம்பாட்டுத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே போன்று சேலம் மற்றும் தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையங்களை சீரமைக்கும் பணிகளும், திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோவில் சுற்று வட்டார மேம்பாட்டுத் திட்டமும், ஈரோட்டில் பெரும்பள்ளம் ஓடை மேம்பாட்டுத் திட்டமும், திருப்பூரில் ஆற்று முகத்துவார மேம்பாட்டுத் திட்டமும், வேலூரில் புதிய பேருந்து நிலைய வளர்ச்சித் திட்டமும், தஞ்சையில் பாரம்பரிய சுற்றுலா மேம்பாட்டுத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களுக்காக மொத்தம் 11,320.84 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


நகர்ப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தில், தமிழ்நாட்டில் ₹27,556.92 கோடி ரூபாய் செலவில் 5,97,025 குடியிருப்புகள்/வீடுகள் கட்டப்பட உள்ளன. இதில் 22,115 குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 46,435 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Inputs from Press Information Bureau


Next Story
கதிர் தொகுப்பு
Trending News