Top
undefined
Begin typing your search above and press return to search.

இன்று நவராத்திரி 3 –ஆம் நாள் !! திருமணத்தின்போது சந்திரகாந்தாவாக மாறி பிசாசுகளை விரட்டிய துர்காவின் கதை!!

இன்று நவராத்திரி 3 –ஆம் நாள் !! திருமணத்தின்போது சந்திரகாந்தாவாக மாறி பிசாசுகளை விரட்டிய துர்காவின் கதை!!

SaravanaBy : Saravana

  |  1 Oct 2019 7:23 AM GMTதீமைகளை அழித்தும், ஒழித்தும் நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கும் வகையில் 9 பெண் ரூபங்களில் தன்னை வெளிக் காட்டி அருள் புரிகிறாள் துர்கா சக்தி. மஹேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பல வகை ரூபங்கள் எடுத்தாலும் இவை அனைத்தின் அடிப்படை ஆதார சக்தி ஒன்றுதான். இந்த தெய்வங்கள் அனைத்தையும் ஒவ்வொரு வடிவில் ஒவ்வொரு நாளும் 9 நாட்களுக்கு நம் வீட்டிற்கே வரவழைத்து போற்றி வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி விழாவாகும்.


மேற்கண்ட இந்த 9 நவசக்திகளையும் ஷைலாபுத்ரி, பிரம்மச்சாரினி, சந்திரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, கத்யாயினி, கல்ராத்திரி, மகாகவுரி மற்றும் சித்திதத்ரி என வட மொழிகளில் குறிப்பிடப்படுகின்றன. மொழியால் பெயர்கள் வேறுபடுவதுபோல தெரிந்தாலும் வழிபடும் சக்தியும், வழி படும் முறைகளும் குமரியிலிருந்து இமயம் வரை ஒன்றாகவே காலம் காலமாக உள்ளன. அரசியலுக்காக அற்பர்கள் நீ வேறு...நான் வேறு என்று பேசினாலும் நம் பாரத ஒருமைப்பாடு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆன்மீகத்தால் குமரியிலிருந்து இமயம் வரை எவ்வாறு உறுதியாக பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறியலாம்.


இன்று நவராத்திரி விழாவின் 3 ஆம் நாள்.


நவராத்திரியின் 2 ராத்திரிகள் நேற்றுடன் முடிந்தன. சென்ற இரு ராத்திரிகளிலும் ஷைலாபுத்ரி, பிரம்மச்சாரினி ஆகிய இரு வடிவங்களிலும் துர்கா தேவி நம் வீட்டுக்கே வந்து அருள் பாலித்தாள்.


நவராத்திரியின் மூன்றாம் நாளான இன்று சிவபெருமானை மணந்த துர்கா தேவியின் மூன்றாவது வடிவமான சந்திரகாந்தாவுக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவள் அரை நிலவின் வடிவில் உள்ள மணியைக் கொண்டு அலங்கரிக்கிறாள், எனவேதான் சந்திரகாந்தா என்ற பெயர் பெறுகிறாள். எட்டு கைகளுடன் காணப்படும் இவளது கைகள் ஒவ்வொன்றிலும் திரிசூலம்,கடம், வில்-அம்பு, வாள், தாமரை மலர், மணி (காந்தா) மற்றும் கமண்டலம் (நீர் ஜாடி) ஆகியவற்றை வைத்திருக்கின்றன, மேலும் ஒரு கை அபய முத்ராவில் உள்ளது , ஆசீர்வதிக்கும் தோரணையில் இருக்கிறாள். ஒரு புலி அல்லது சிங்கத்தின் மீது அமர்ந்து துணிச்சலின் அடையாளமாக சவாரி செய்கிறாள், இதனால் அவள் சாமுண்டி மற்றும் ராஞ்சந்தி என்றும் அழைக்கப்படுகிறாள்.


புராணக்கதைப்படி, சிவபெருமான் எந்தப் பெண்ணையும் திருமணம் செய்ய மாட்டேன் என்று சொன்னதைத் தொடர்ந்து பார்வதி தேவி பெரும் துன்பத்துக்கு ஆளானார். இருப்பினும், அவளுடைய துன்பங்கள் சிவனையும் துன்பத்தில் மூழ்கடித்தன. இதனால் சிவன் தனது மனதை மாற்றிக் கொண்டு பார்வதியுடன் முறைப்படி ஐக்கியமாக ஒப்புக் கொண்டார். திருமணத்தின் போது சிவபெருமானுடன் ஊர்வலத்தில் மற்ற சிவ கணங்களான துணை தெய்வங்களும், மனிதர்கள் பலரும், ஏராளமான பூதங்களும் அவற்றுடன் பல பேய், பிசாசுகளும் வந்ததாக கூறப்படுகிறது.


இவற்றைக் கண்ட பார்வதியின் பெற்றோர் பயந்து போனார்கள். பார்வதியின் தாயார் பயத்தில் மயங்கி கீழே விழுந்து போனாராம். அப்போது பார்வதி தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சந்திரகாந்தமாக தன்னை மாற்றிக் கொண்டு சுய வடிவத்தை எடுத்துக் கொண்டாளாம். பார்வதியின் உருவத்தைக் கண்ட பேய்களும் பிசாசுகளும் மாயமாய் மறைந்து போக அதன் பிறகு நிலைமை சீரடைந்து அழகான இளவரசன் போல பொன்னாபரணங்களுடன் சிவன் தோன்றி இரு தரப்பு வாழ்த்துக்களுடன் திருமணம் மகிழ்ச்சியில் நிறைவேறியதாக ஐதீகம் உண்டு.


அவள் மிகவும் அமைதியானவள் என்றாலும், தூண்டப்படும்போது, அவளுடைய கோபத்திற்கு எல்லையே கிடையாது. அப்போது யாராலும் எதிர்க்க முடியாத கடுமையான போர் தோற்றத்தில் இருப்பாள். தீமையையும் அதை உண்டாக்கும் பேய்களையும், பிசாசுகளையும் ஒழிக்க அவள் எப்போதும் தயாராக இருக்கிறாள். பாரதத்தாயாக எப்போதும் நம்முடன் இருந்து நம்மை ஒற்றுமையாக காப்பதுடன் பகைவர்களை காணாமல் செய்திடுவாள்.  எனவே இன்றைய மூன்றாம் நாள் அவதாரம் மிகவும் சிறப்புடையது ஆகும் .Next Story