பராசக்தி – படம், கருணாநிதியின் சொந்த கதை இல்லை! இதோ அதன் மூலப்பத்திர வீடியோ ஆதாரம்!
பராசக்தி – படம், கருணாநிதியின் சொந்த கதை இல்லை! இதோ அதன் மூலப்பத்திர வீடியோ ஆதாரம்!

By : Kathir Webdesk
திமுகவின் பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்ற உண்மை இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கான விசாரணை தேசிய பட்டியலின ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த இடம் பஞ்சமி நிலம்தான் என்பதற்கான ஆதாரங்களை மூத்த தலித் தலைவரும், பாஜக செயற்குழு உறுப்பினருமான தடா பெரியசாமி வெளியிட்டுள்ளார். அது தொடர்பான பல ஆதார ங்களையும் அவர், தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.
ஆனால் முரசொலி நில மூலப்பத்திரத்தை வெளியிடுமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழக மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும் அவரால் முரசொலி மூலப்பத்திரத்தை வெளியிட முடியவில்லை. அவரிடம் அதற்கான மூலப்பத்திரம் இல்லை என்று உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால்தான் திமுக சார்பில் தேசிய பட்டியல் இன ஆணையத்தில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி, இதனை விசாரிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு உரிமை இல்லை என்றும், அந்த ஆணையத்தையே மிரட்டும் வேலையிலும் ஈடுபட்டார். முரசொலி மூலப்பத்திர பிரச்சனையை கிளப்பிய பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், பாஜக பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தடா பெரியசாமி ஆகியோர்களை, 48 மணி நேரத்திற்குள்ளாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரட்டினார்கள். ஆனால் பல 48 மணி நேரங்கள் கடந்த பிறகும், இதுவரை கோர்ட்டில் திமுக வழக்கு தொடர வில்லை.
முரசொலி மூலா்பத்திரத்தை கேட்ட தலைவர்கள் மீது கோர்ட்டில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால், பின்னர் கோர்ட்டிலும் மூலப்பத்திரத்தை கேட்ப்பார்கள் என்ற பயத்தில், அவர்கள் மீது வழக்கு போடுவதில் இருந்து திமுக ஓட்டம் பிடித்துள்ளது.
இது ஒருபுறமிருக்க, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடமும், பஞ்சமி நிலம்தான் என்று திருமாவளவன் பேசியது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்று திமுகவினர் மீது பல்வேறு அபகரிப்பு புகார்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளன.
திமுகவின் நில அபகரிப்பு ஒருபுறம் இருக்க, அடுத்தவர்களின் கதைக்கு தனது பெயரை கருணாநிதி போட்டுக்கொண்ட உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆமாம், பராசக்தி படத்தின் கதையே கருணாநிதிக்கு சொந்தமானது அல்ல. அது கருணாநிதியின் கதை என்று சொல்வதே அப்பட்டமான பொய் என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பராசக்தி நாடகமாக பல்வேறு மேடைகளில் நடத்தப்பட்டது என்றும், அதை ஏவிஎம் அதிபர் மெய்யப்பச் செட்டியார் உரிமம் வாங்கி திரைப்படமாக தயாரித்தார் என்ற உண்மையை நடிகர் சிவாஜி கணேசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்போது அது தமிழர்கள் மத்தியில் பரவாமல் பார்த்துக்கொள்ளப்பட்டாலும், இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகர் சிவாஜி கணேசன் கூறியிருப்பதாவது:-
அந்த காலத்தில் ரத்திரனம், தேவி நாடக சபாவை நடத்தி வந்தார். அவர்கள் பாவலர் பாலசுப்ரன் எழுதிய பராசக்தி என்ற நாடகத்தை நடத்தி வந்தார்கள். அந்த நாடகத்தை என்னுடைய தெய்வம் பி.ஏ.பெருமாள் அவர்களும், ஏவிஎம் அவர்களும், மற்றவர்களும் போய் பார்த்து இருக்கிறார்கள்.
பார்த்துவிட்டு சினிமா எடுப்பதற்காக அதனுடைய ரைட்சை வாங்கி விட்டார்கள். வாங்கி விட்டு வந்த பிறகு இதில் யாரை ஹீரோவாக போடலாம் என்ற பிரச்சனை வந்தது. அப்போது பெருமாள் முதலியார் என்னுடைய பெயரையும் அதில் சொல்லி இருக்கிறார். காரணம் பெருமாள் முதலியார், அவர் சின்ன பிள்ளையாக இருந்ததில் இருந்தே நாடகத்தில் என்னை பார்த்துக் கொண்டே வந்துள்ளார். அவர் பெரிய நாடக ரசிகர்.
இவ்வாறு நடிகர் சிவாஜி கணேசன் கூறியுள்ளார்.
இதன்மூலம் பராசக்தி, கருணாநிதியின் கதை என்று 67 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. திமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பராசக்தி படத்திற்கு கதை எழுதியவர் கருணாநிதி என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
“1952-ல், கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ்த் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் என்னென்ன கதை – வசனங்கள் எல்லாம் மற்றவர்களுடையதோ தெரியவில்லை. கருணாநிதி எழுதியதாக வெளியான புத்தகங்களில் எவையெல்லாம் பிறருடையதோ அதுவும் தெரியவில்லை.
திமுகவிற்கு சொந்தமானவை என்று சொல்லப்படுகின்ற சொத்துக்களும், கருணாநிதி குடும்பத்திற்கு உள்ள சொத்துக்களும் நேர்மையான வழியில் சம்பாதிக்கப்பட்டவையா? அல்லது அபகரிக்கப்பட்டவையா? என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே உள்ளது.
