கொரோனாவால் இறந்தவர்களை மரியாதையுடன் தகனம் செய்யும் ஈஷா - ஒரு வருடத்திற்கு மேலாக தொடரும் சேவை!
தமிழ்நாட்டில் ஈஷாவின் பராமரிப்பின் கீழ் இயங்கும் 18 மயானங்களில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மிகுந்த மரியாதையுடன் பாதுகாப்பாக தகனம் செய்யப்படுகிறது. அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் உயிரையும் பணையம் வைத்து இச்சேவையை ஒரு வருடத்திற்கு மேலாக செய்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் "ஈஷா மயானங்களில், காலமானவர்களை உகந்த சூழலில் நுண்ணுணர்வுடன் விடுவிக்க தன்னார்வத்தொண்டர்கள் அயராது உழைக்கிறார்கள். இது வாழ்வோருக்கும் விடைபெறுவோருக்கும் மிகவும் முக்கியம். ஆசிகள்" என்று தெரிவித்துள்ளார்
ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்களும், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் மருத்துவ உதவிகளை ஈஷா வழங்கி வருகிறது. மேலும், அனைத்து மயானங்களும் நல்ல முறையில் தூய்மையாக பராமரிக்கப்பட்டும் வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் சேவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சவால் மிகுந்த இப்பணியை மயான ஊழியர்கள் ஈஷாவின் ஒத்துழைப்பு மற்றும் வழிகாட்டுதல் படி மிகுந்த பாதுகாப்பாக செய்து வருகின்றனர்.
அவர்களின் உடல் நலனில் ஈஷா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. தினமும் கப சுர குடிநீர் அல்லது நிலவேம்பு கசாயம் வழங்குவது, சத்தான உணவுகளை வழங்குவது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் யோக பயிற்சிகளை கற்றுக்கொடுப்பது, தேவைப்படும் போது உடனுக்குடன் மருத்துவ உதவிகள் வழங்குவது போன்ற பணிகளை செய்து வருகிறது.