கோவில் நிலம் மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு-அறிக்கை கேட்ட தர்மபுரி ஆட்சியர்!

Update: 2021-07-02 13:07 GMT

தர்மபுரியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோவில் சொத்துக்கள் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்த விரிவான அறிக்கையை இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் பாப்பாரப்பட்டி டவுன் பஞ்சாயத்து செயலர் சமர்ப்பிக்க வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகாவுக்கு உட்பட்ட பாப்பாரப்பட்டி, பனைக்குளம், அஞ்சேஹள்ளி, போயல்மாரியிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்கு சொத்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பல்வேறு புகார் அளிக்கப்பட்ட போதிலும் இந்து அறநிலையத்துறை அமைதியாகவே இருந்து வந்தது.

சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் கோவில் சொத்துக்கள் தொடர்பான ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பை அளித்த பிறகு கோவில் நிலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. இதேபோல் ஒரு வழக்கை திருதொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் பிறகு கோவில் நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை அவர் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து இப்பகுதியில் உள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு மற்றும் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஆகியோர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.அவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் சொத்துகளை மீட்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source : Dinamalar 

Similar News