காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இடி தாக்கியது - அபசகுணத்தால் கவலை!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் இடி தாக்கியதில் கோபுரத்தின் உச்சியில் உள்ள யாளியின் ஒருபகுதி சேதமடைந்து உருவம் உடைந்து கீழே விழுந்து உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அபசகுணம் போன்று இருப்பதால் எதிர்காலங்களில் மக்களுக்கு ஏதும் துன்பம் வரக்கூடாது என்பதற்காக பரிகார பூஜை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று முந்தினம் மாலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரத்தில் திடீரென இடி தாக்கி பயங்கர சத்தம் கேட்டுள்ளது. கோவிலின் கோபுர உச்சியில் இடி தாக்கியதில் உச்சியிலுள்ள யாளியின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்காத நிலையில் தெற்கு கோபுர வெளி வாசலில் மழைக்காக பொதுமக்கள் சிலர் ஒதுங்கி இருந்தனர்.
அப்போது இடி தாக்கியதில் கோபுர உச்சியிலிருந்து யாளியின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு மழைக்காக ஒதுங்கி இருந்தவர்களுக்கு எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை. உலக பிரசித்தி பெற்ற இந்த காமாட்சி அம்மன் கோவிலில் இதற்கு முன்னதாக இதுபோன்று எந்த அசம்பாவிதமும் ஏற்படாத நிலையில் தற்போது இடி தாக்கி உள்ளதால் பக்தர்கள் கவலையடைந்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று மூன்றாவது அலை பரவும் என்று மருத்துவர்கள் அறிவித்துள்ளதால் இந்த இடி தாக்கிய சம்பவம் பக்தர்களிடையே அபசகுணம் நடந்து விட்டதே என்ற சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் நடை திறக்க உள்ளதால் பரிகார பூஜை நடத்தி விட்டு கோவிலை திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.