தமிழகம் முழுவதும் நாளை கோவில்கள் திறப்பு - தஞ்சை பெரிய கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்!

Update: 2021-07-04 09:02 GMT

தஞ்சை பெரிய கோவில் நாளை முதல் பக்தர்கள் வழிபடுவதற்கு திறக்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளாக தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக வட்டங்கள் போடும் பணி, ஆலயம் தூய்மை செய்யும் பணி போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது வழிபாட்டு தளங்கள் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதைத் தொடர்ந்து நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட உள்ளதால் கோவில்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல் தஞ்சை பெரிய கோவிலிலும் பக்தர்கள் வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகிறது.

பக்தர்கள் உள்ளே செல்வதற்கும் வெளியே வருவதற்கும் தனித்தனி வழிகள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக வட்டங்கள் வரையப்படுகின்றன. மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருமாறு கோவில் நிர்வாகம் தெரிவித்து வருகிறது. அதேபோல் கோவிலுக்குள் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிலை சுற்றி பார்க்கவும், கோவிலுக்குள் அமரவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயில் திறக்கப்பட உள்ளது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும் நோய்தொற்று கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து சிவனை வழிபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Similar News