திடீரென்று தரிசனத்திற்கு அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம் - ஏமாற்றத்துடன் திரும்பிய பக்தர்கள்!
ஊத்துக்கோட்டையில் அமைந்துள்ள அருள்மிகு சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று தரிசனத்திற்கு திடீரென்று அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி மாலையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை பகுதியில் புகழ் பெற்ற சிறுவாபுரி முருகன் கோவில் அமைந்துள்ளது. ஐந்து நிலை ராஜகோபுரம் உடைய இக்கோவிலில் மூலவராக பாலசுப்பிரமணிய சுவாமி அருள்புரிகிறார். அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியது 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலில் தான். இக்கோவில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று ஊரடங்கு தளர்வு நேற்று அளிக்கப்பட்டதும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்து சென்றனர். இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கோவில் நிர்வாகம் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருந்தது. இதனால் காலையில் இருந்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர்.
பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி மாலை கோவில் திறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு மேல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. காலையில் முருகனை தரிசிக்க வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவில் நிர்வாகத்தின் இந்த திடீர் அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர். கோவிலுக்கு செல்வதற்கு அனைவரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து, கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளை பின்பற்றினால் கொரோனா என்ற கொடிய நோய் நம்மை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்