பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிக முக்கியத்துவம் - மத்திய அரசு தாராளம்!
இந்தியாவில் பல்வேறு இளைஞர்களை தொழில் துவங்க உத்வேக படுத்தும் திட்டமான முத்ரா திட்டத்தின் மூலம் நாட்டிலேயே அதிகமாக தமிழகத்திற்கு அதிக கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி முத்ரா யோஜனா திட்டத்தை 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் கார்பரேட் அல்லாத, வேளாண் தொழில் சாராத நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடன் தொகை வழங்குவதற்காக இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. வணிக வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் இந்த முத்ரா கடன்களை வழங்குகின்றன.
முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக மூன்று பிரிவுகளில் கடனுதவி வழங்கப்படுகிறது. முதலாவது திட்டமான சிஷு (Shishu) என்ற திட்டத்தில் ₹.50,000 வரையிலும், இரண்டாவது திட்டமான கிஷோர் (Kishor) என்ற திட்டத்தின் மூலம் ₹.50,000 முதல் ₹.5 லட்சம் வரையிலும், மூன்றாவது திட்டமான தருண் (Tarun) என்ற திட்டத்தின் மூலம் ₹.5 லட்சம் முதல் ₹.10 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை நாடு முழுவதும் 30 கோடிக்கும் மேற்பட்ட பயனாளர்கள் பயனடைந்துள்ளனர்.₹ 15.97 லட்சம் கோடி கடன்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 2019 முதல் 2021ஆம் ஆண்டு நிதியாண்டில் 11.29 கோடி பயனாளர்களுக்கு ₹ 6.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முத்ரா திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே அதிகமாக தமிழகத்திற்கு ₹ 63,150 கோடி ரூபாய் கடன் தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மட்டும் 1.20 கோடி பேர் பயன் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற்றுள்ள தொகை பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களை விட அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.