அம்மன் புடவையை அவிழ்த்து வக்கிர செயலில் ஈடுபட்ட பாதகர்கள் - ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

Update: 2021-07-26 02:35 GMT

ராணிப்பேட்டை அருகே அம்மன் சிலையின் மீது இருந்த புடவையை எரித்து சொல்ல வாய் கூசும் மிதமான அருவருக்கத்தக்க செயலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்து முன்னணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே கொண்டாபுரத்தில் 1,500 ஆண்டுகள் பழமையான பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலில் ரவி என்பவர் பூசாரியாக இருக்கிறார். இந்த கோவிலில் காமாட்சி அம்மன், துர்க்கை அம்மன் சன்னதிகள் உள்ளன.

கடந்த 19-ஆம் தேதியன்று வழக்கமான பூஜைகளை முடித்த பூசாரி ரவி கோவிலை பூட்டி விட்டு வீடு சென்றுள்ளார். மறுநாள் காலை கோவிலுக்கு வந்து பார்த்த ரவிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

கோவிலுக்குள் இருந்த அம்மன் சிலைகளின் பட்டுப்புடவைகள் எரிக்கப்பட்ட நிலையிலும் அம்மன் சிலை அவமதிக்கப்பட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இரவில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கோவில் சுற்றுச்சுவர் ஏறிக் குதித்து சன்னதிகளில் இருந்த பூட்டை உடைத்து காமாட்சி மற்றும் துர்க்கை அம்மன் சன்னதிக்குள் சென்று இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அறிந்த கோவில் பூசாரி உடனடியாக காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

ஆனால் இந்தப் புகார் தொடர்பாக எந்த விசாரணையும் காவல் துறை சார்பாக மேற்கொள்ளவில்லை. இதையறிந்த இந்து முன்னணி வேலுார் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் தலைமையில் அதன் நிர்வாகிகள் ராணிப்பேட்டை எஸ்.பி., அலுவலகத்தில் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு புகார் அளித்தனர். அந்த புகாரில் காமாட்சி அம்மன் மற்றும் துர்க்கை அம்மன் மீது இருந்த புடவையை அவிழ்த்து மர்மநபர்கள் எரித்துள்ளனர். மேலும் அம்மன் சிலையையும் களங்கப்படுத்தியுள்ளனர். இந்த செயல் அம்மன் பக்தர்கள் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பதட்டம் மற்றும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதால் சிலையை அவமதித்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.

இதே சம்பவம் இதே கோவிலில் மூன்று முறை நடந்ததாக கூறப்படுகிறது. அப்படி இருந்தும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இந்து முன்னணியினர் அதிருப்தியடைந்து போராட்டத்தில் குதித்தனர். மேலும் கோவிலை சுற்றி சிசிடிவி கேமரா பொருத்தி உள்ளவர்கள் காவல்துறையினர் உதவியுடன் விளக்குகள் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். சிலையை கூட ஆபாசமாக பார்த்து இவ்வாறான வக்கிர செயல்களில் ஈடுபடுபவர்கள் இருக்கும் இடத்தில் பெண்கள் எப்படி நடமாடுவது என்ற அச்சம் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ளது.

Similar News