தெலங்கானாவில் உள்ள ருத்ரேஸ்வரர் கோவில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரியப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே பாலம்பேட்டில் ருத்ரேஸ்வரர் கோவில் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. காகடியர்களின் தலைநகரமான வாரங்கல் நகரத்திலிருந்து 77 கிமீ தொலைவிலும், ஐதராபாத்திலிருந்து 157 கிமீ தொலைவிலும் புகழ்பெற்ற ராமப்பா கோயில் அமைந்துள்ளது.
இக்கோயிலின் 1213ம் ஆண்டின் கல்வெட்டுக் குறிப்பின் படி, காகடிய மன்னர் கணபதி தேவாவின் ஆட்சிக்காலத்தில், அவரது தலைமைப் படைத்தலைவர் ரேச்சர்ல ருத்திரன் என்பவர் இக்கோயிலைக் கட்டியதாக அறியப்படுகிறது. இக்கோயில் அழகிய சிற்பங்களுடன் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கோயிலைத் தாங்கும் தூண்கள் கருங்கற்களால் நிறுவப்பட்டுள்ளன. தற்போது இந்த கோவிலை இந்திய தொல்லியல் ஆராய்ச்சி நிறுவனம் சீரமைத்து பராமரித்து வருகிறது.
சிறப்பு வாய்ந்த இந்த கோவிலை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி வந்த நிலையில் மத்திய அரசின் பரிந்துரையை ஏற்ற யுனெஸ்கோ ராமப்பா கோவிலை உலக பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் கம்பீரமான இந்த கோவிலுக்கு சென்று அதன் பிரம்மாண்டத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என்று மக்களை கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.