கத்தோலிக்க திருச்சபைகளில் தீண்டாமை - தலித் கிறிஸ்தவர்கள் நியாயம் கோருகிறார்களா? நாடகம் ஆடுகிறார்களா?

Update: 2021-07-28 01:00 GMT

கிறிஸ்தவத்தில் கத்தோலிக்க தேவாலயங்களில் நிலவும் தீண்டாமை குறித்து தமிழக தலித் கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்து மதத்தில் தீண்டாமை இருப்பதாகவும் அதனால் கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாறுங்கள் என்று மதமாற்றம் செய்யும் மிஷினரி கும்பல்கள் அப்பாவி இந்துக்களை மதம் மாற்றிய பிறகு அவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவது பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் 70 சதவீதத்திற்கு மேல் இருக்கும் கிறிஸ்தவர்கள் தலித் சமூகத்தை சார்ந்தவர்களாக இருந்த போதும் தமிழ்நாட்டில் உள்ள 18 பிஷப்களில் ஒரே ஒரு பிஷப் மட்டும் தலித்தாக இருக்கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக தலித் கிறிஸ்தவர்களின் கூட்டமைப்பு பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக 26ஆம் தேதி தமிழக தலித் கிறிஸ்தவர்களின் ஆர்ப்பாட்டமொன்று நடைபெறுவதாக போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டன. அதில் விகிதாச்சார அடிப்படையில் தலித் ஆயர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும், திருச்சபைகளில் நடைபெறும் தீண்டாமை பாகுபாடுகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தலித் கிறிஸ்தவர்களுக்கு என நல வாரியம் ஒன்று அமைத்திட வேண்டும் என்றும் தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுப்பதாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

கிறித்தவ மதத்தில் தீண்டாமை உச்சக்கட்டத்தில் இருந்து வருவதாகவும், தலித் கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை தனி கல்லறையில் புதைக்க வேண்டியதிருப்பதாகவும், சர்ச் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசு கல்லறைகளிலும் கூட தலித் கிறிஸ்தவர்களை தனியாக ஒரு இடத்தில் புதைக்குமாறு கட்டாயப்படுத்தபடுவதாகவும் தலித் கிறிஸ்தவர்கள் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தலித் கிறிஸ்தவர்களுக்கு என்று தனி சர்ச், கல்லறை, சவ ஊர்தி போன்றவற்றை பயன்படுத்துவது, சர்ச்சுக்கு செல்லும் பொது வழியை தலித் கிறிஸ்தவர்கள் பயன்படுத்த விடாமல் தடுப்பது, திருச்சபைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளில் தலித்களை நியமிக்க மறுப்பது, திருச்சபை நிர்வாக விவகாரங்களில் அனுமதி மறுப்பது என்று அடுக்கடுக்கான புகார்கள் இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விஷயங்களில் மாவட்ட வாரியாக தலித் கிறிஸ்தவர்களுக்கு நடக்கும் தீண்டாமைக் கொடுமை குறித்து தேசிய தலித் கிறிஸ்தவர்கள் சபை ஒரு பட்டியலை தயார் செய்துள்ளது.

இதே போல் பிஷப் போன்ற உயர் பதவிகளில் தலித் கிறிஸ்தவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் இது குறித்து அண்மையில் வாட்டிகனுக்கு கடிதம் எழுதியும் எந்த பயனும் இல்லை என்றும் அதிருப்தி நிலவுகிறது. எனினும், கிறிஸ்தவ மதத்திலும் சாதியக் கொடுமைகள் இருக்கின்றன என்று தெரிந்தும், அந்த மதத்தில் நீடிப்பதோடு அல்லாமல், கிறிஸ்தவராக இருந்து கொண்டே இந்து தலித் சகோதரர்களின் இட ஒதுக்கீடு மற்றும் பிற அரசு சலுகைகளை பெற நினைப்பது தலித் கிறிஸ்தவர்களின் போராட்டத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்தவ மத கட்டமைப்புகளிலும் நிர்வாகத்திலும் சம உரிமை கிடைக்கவில்லை என்றால் அவர்கள் தட்ட வேண்டியது வாட்டிகனின் கதவுகளை மட்டுமே. அதை விடுத்து இந்து தலித்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் வண்ணம் இட ஒதுக்கீடு கேட்பது இந்த போராட்டங்கள் வெறும் நாட்களோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல் இல்லை.

ஏனெனில் தலித் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் அரசு சலுகைகளை தர வேண்டுமென்று கிறிஸ்தவ மத குருக்கள் பிரச்சாரங்களும் போராட்டங்களும் செய்கின்றனர். எனவே அரசு சலுகைகள் கோருவது இது இந்து மக்களை கிறிஸ்தவ மதத்தை நோக்கி ஈர்க்க உபயோகிக்கப்படும் தந்திரமாகவே தெரிகிறது. இவ்வளவு கொடுமைகளுக்கு ஆளாகியும் "திருச்சபையில் நிலவும் தீண்டாமையை" நீக்க திருச்சபையிடம் தான் தலித் கிறிஸ்தவர்கள் கோரிக்கை விடுக்கின்றனரே தவிர, திருச்சபையில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்குமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கவில்லை என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

Similar News