புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி புதுச்சேரியில் 1 கி.மீ தொலைவுக்கு ரோடு ஷோவில் ஈடுபட்ட நிலையில், கூட்டணிக் கட்சியினர் மற்றும் பொது மக்கள் கூடி நின்று பூக்கள் தூவி வரவேற்றனர்.
புதுச்சேரி விமான நிலையத்தில் பிரதமரை முதல்வர் ரங்கசாமி, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வரவேற்றனர். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் கிழக்கு கடற்கரை சாலை, முத்தியால்பேட்டை வழியாக 'ரோடு ஷோ' தொடங்கும் அஜந்தா சந்திப்புக்கு பிரதமர் வந்தார்.
'ரோடு ஷோ' வாகனத்தில் பிரதமரின் ஒரு பக்கத்தில் முதல்வர் ரங்கசாமி, மறுபக்கம் மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பின்னால் பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர். அண்ணா சாலை வழியாக பிரதமர் மோடி கை அசைத்தபடி வாகனத்தில் வந்த நிலையில் 5.10 மணிக்கு நேரு வீதி சந்திப்பில் 'ரோடு ஷோ' நிறைவடைந்தது.
ஒரு கி.மீ நடந்த இந்நிகழ்வை தொடர்ந்து அஜந்தா சிக்னல் முதல் நேரு வீதிவரை அண்ணா சாலை மக்களால் நிரம்பியது. பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க பாஜகவினர் பல விதமான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.