கோவில் சொத்துக்களை அறநிலையத்துறை நிர்வகிக்கலாமே தவிர பட்டா போட முடியாது - பா.ஜ.க SR சேகர் கண்டனம்!
தமிழகத்தில் இருக்கும் கோவில்களுக்கு சொந்தமாக இருக்கும் சொத்துகளுக்கு அறநிலையத்துறை காப்பாளராக இருந்து நிர்வகிக்கலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது என்று கோவில் பாதுகாப்பு சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அண்மையில் தெரிவித்திருந்தார். அதில் அறநிலையத்துறை 78வது சட்டப் பிரிவின் படி கோவில் நிலத்தில் வீடுகட்டி வசித்து வருபவர்களிடம் முதலில் வாடகை வசூலிக்கப்படும் என்றும் பிறகு காலப்போக்கில் அவர்களுக்கு பட்டா பெற்று தரப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் ஆன்மீக நல விரும்பிகள் வரை அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாரதிய ஜனதா கட்சி பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், "தமிழகத்தில் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களுக்கு அறநிலையத்துறை காப்பாளராக இருக்க முடியுமே தவிர அதற்கு ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. கோவில் சொத்துக்களை விற்கவோ, ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கவோ, அரசுக்கு உரிமையில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மாமன்னன் ராஜராஜ சோழன் எழுதிய பட்டயத்திலேயே, 'சந்திர சூரியன் உள்ளவரை, இது கடவுளின் சொத்து' என்று உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். மேலும் அறநிலையத் துறை அமைச்சர், சட்ட விரோத செயலில் ஈடுபடும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக பேசுவது அதிர்ச்சியளிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதேபோல் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அடங்கிய ஆவணங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருவதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கோவிலுக்கு சொந்தமான உண்மையான ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்தார். கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருப்பதை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Source: Dinamalar