தமிழகத்தை சேர்ந்த 32 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது : காலக்கெடுவுக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே 8 கோடி இலக்கை அடைந்து மத்திய அரசு சாதனை
தமிழகத்தை சேர்ந்த 32 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது : காலக்கெடுவுக்கு ஏழு மாதங்களுக்கு முன்பே 8 கோடி இலக்கை அடைந்து மத்திய அரசு சாதனை
உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி எரிவாயு இணைப்புகளை விநியோகிக்கும் இலக்கை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அடைந்துள்ளது. 8 கோடி எல்.பி.ஜி இணைப்புகளை விநியோகிப்பதற்கான காலக்கெடுவாக மத்திய அரசு மார்ச் 2020 ஐ நிர்ணயித்திருந்தது.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின் கீழ் ஏழை குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிபொருளை வழங்குவதையும், ஆரோக்கியமற்ற வழக்கமான சமையல் எரிபொருள்களான விறகு போன்றவற்றை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது மத்திய அரசு. எல்.பி.ஜி-யின் பயன்பாட்டால் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம், சுற்றுச்சூழல் மற்றும் பெண்களின் பொருளாதார உற்பத்தித்திறன்களில் நன்மைகளைக் காணலாம்.
இந்தத் திட்டம் இந்தியாவில் இதுவரை 715 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 8,03,39,993 எரிவாயு இணைப்புகள் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளதாக உஜ்வாலா திட்டத்தின் (P.M.Y.U) அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் 1.47 கோடி இணைப்புகளும், மேற்கு வங்க மாநிலத்தில் 88 லட்சம் இணைப்புகளும், பீகார் மாநிலத்தில் 85 லட்சம் இணைப்புகளும், மத்தியப் பிரதேச மாநிலத்தில் 71 லட்சம் இணைப்புகளும், ராஜஸ்தான் மாநிலத்தில் 63 லட்சம் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளதாக உஜ்வாலா திட்டத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பயனாளிகளில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் பட்டியல் இன பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 32,43,190 ஏழை குடும்பங்கள் இலவச எரிவாயு இணைப்பை பெற்றுள்ளனர்.
செப்டம்பர் 6 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநில அவுரங்காபாத்தில் கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் ஏற்பாடு செய்திருந்த மாநில அளவிலான பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கான கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனாவின்(PMUY) கீழ் 8 கோடி எல்.பி.ஜி இணைப்புகளை அளித்து சாதித்ததைக் குறிக்கும் வகையில், பிரதமர் ஐந்து பயனாளிகளுக்கு எல்.பி.ஜி இணைப்புகளை விநியோகித்தார். இலக்கு தேதிக்கு ஏழு மாதங்களுக்கு முன்னதாகவே இது அடையப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, மகாராஷ்டிராவில் மட்டும் 44 லட்சம் உஜ்வாலா இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.