5 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் சலுகை - சர்ச் அறிவிப்பால் சர்ச்சை!
கேரளாவில் 18 சதவீதமாக இருந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக குறைந்தது விட்டதால் 5 குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கும் குடும்பங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று சர்ச் நிர்வாகம் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் சிரிய மலபார் கத்தோலிக்க ஆலயத்தின் பாலா மறைமாவட்டம் சார்பில், 'குடும்ப ஆண்டு' கடைபிடிக்கப்படுகிறது. இது தொடர்பாக பாலா மறைமாவட்ட ஆயர் ஜோசப் கல்லரங்காட் என்பவர் அனைத்து அடுத்து ஆலயங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பினார். அந்த சுற்றறிக்கையில் பாலா மறைமாவட்டத்தில் இருக்கும் கத்தோலிக்க கிறிஸ்துவ குடும்பங்களில் 5 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் பெற்ற தம்பதிகளுக்கு 1500 ரூபாய் மாதந்தோறும் உதவித் தொகையாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அத்தம்பதிகளின் குழந்தைகளுக்கு மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் இலவச கல்வியும், மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 18 சதவீதத்தில் இருந்து 14 சதவீதமாக குறைந்துள்ளதால் கத்தோலிக்கர்கள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்த அதிரடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக பாலா மறைமாவட்ட குடும்ப நல இயக்கத்தின் பாதிரியார் ஜோசப் குற்றிங்கல் தெரிவித்துள்ளார்.
இயற்கை வளங்கள் போதுமான அளவு இல்லாததால் மக்கள் தொகையை குறைக்க வேண்டும் என்று அரசு பாடுபட்டு வரும் நிலையில், 'நாடு எக்கேடு கெட்டால் நமக்கென்ன நமக்கு நமது மதத்தினர் அதிக அளவில் இருக்க வேண்டும்' என்பதை குறிக்கோளாகக் கொண்ட இது போன்றவர்கள் தங்கள் அறியாமையில் இருந்து விடுபட்டு தேசத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.