ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா..? கோவை என்.ஐ.ஏ. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆட்சேபகரமான நோட்டீசுகள்.!
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பா..? கோவை என்.ஐ.ஏ. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆட்சேபகரமான நோட்டீசுகள்.!
இலங்கையில் கடந்த ஈஸ்டர் பண்டிகையின்போது தொடர் குண்டுவெடிப்பு நடந்ததில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஜக்ரன் ஹசீம் என்ற பயங்கரவாதியுடன் கோவையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு இருப்பதை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி கோவையைச் சேர்ந்த 6 பேரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகியோருக்கு தடை செய்யப்பட்ட இயக்கமான ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பதை கண்டறிந்தனர்.
மேலும் இவர்கள் 2 பேரும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பியதாகவும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பிற்கு ஆட்களையும் தேர்வு செய்ததாகவும் தென்இந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாகவும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து முகமது அசாருதீன் மற்றும் ஷேக் இதயத்துல்லா ஆகியோரை ‘உபா’ சட்டத்தின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்தனர்.
இதற்கிடையில், கேரள மாநிலம் கொச்சியிலிருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விக்ரம் தலைமையில் 5 குழுக்களாக நேற்றுக்காலை 5.30 மணிக்கு கோவை வந்தனர். இதற்காக அவர்கள் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு கோர்ட்டில் இருந்து வாரண்டு பெற்று வந்தனர்.
அந்த வாரண்டை காட்டி என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவை உக்கடம் ஜி.எம்.நகரைச் சேர்ந்த உமர் பாரூக்(வயது 32), கோவை வின்சென்ட் சாலை வீட்டு வசதி குடியிருப்பை சேர்ந்த சனாபர் அலி(24), அதே சாலையை சேர்ந்தச் சமேசா முபின்(27), உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த முகமது யாசின்(26), கோவை பள்ளி வீதியைச் சேர்ந்த சதாம் உசேன்(27) ஆகிய 5 பேர் வீடுகளில் சோதனை நடத்தினார்கள். கோவை மாநகர போலீசாரின் உதவியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனை காலை 6 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நீடித்தது.