ஆதித்ய வர்மா - செயற்கையானவன்! - கதிர் விமர்சனம் #KathirReview
ஆதித்ய வர்மா - செயற்கையானவன்! - கதிர் விமர்சனம் #KathirReview
சீயான் விக்ரம் அவர்களின் மகன் துருவ் கதாநாயகனாக நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ஆதித்ய வர்மா. இது தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடித்து சக்கை போடு போட்ட அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் பதிப்பு தான்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ன? நடிப்பில் அசத்தி இருக்கிறார் துருவ். தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தாரோ அதே அளவுக்கு துருவும் நடித்திருக்கிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு, முக பாவனைகள் என்று அனைத்திலும்
துருவ் சிறப்பாக செய்திருக்கிறார். இது தான் அவரின் முதல் படமா என்று வியக்க வைக்கிறார். வாழ்த்துகள் சீயான், உங்கள் மகன் சரியான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் உங்களை விடவும் அதிகம் சாதிப்பார்.
துருவின் நடிப்பு எல்லாம் சரி தான், ஆனால் படம் எப்படி?
சில திரைப்படங்களை பார்க்கும் பொழுது, இப்படியும் ஒரு உலகம் இருக்கிறதா? இப்படிப்பட்ட பைத்தியங்களும் உலகத்தில் வாழ்கின்றனவா? என்ற கேள்வி நமக்குள் எழும். ஆதித்ய வர்மா அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் தான். இந்த திரைப்படத்தின் கதை ஒன்றும் புதிதல்ல. ஆயிரம் முறை பார்த்து பழக்கப்பட்ட அதே காதல், காதல் முறிவு, ஜாதி, அந்தஸ்து போன்ற விஷயங்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட கதை தான்.
என்னதான் சினிமா கதாநாயகன் என்றாலும், துளி கூட நம்பும் படி இல்லாத காட்சிகள். எந்நேரமும் மது அருந்தி போதை மருந்து உட்கொண்டு போதையிலேயே மிதக்கிறார் நம் ஆதித்ய வர்மா(துருவ்). கோபமோ காதலோ அது எதுவானாலும் அவருக்கு எல்லை என்பதே இல்லை. இது போன்ற திரைப்படங்கள் இளைஞர்களை தவறான வழிக்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமில்லை.
கதையில் பெரிய சுவாரஸ்யம் இல்லை என்றாலும் திரைக்கதையாவது விறுவிறுப்பாக அமைத்திருக்கலாம். ஜவ்வு போல் மெல்ல நகரும் திரைக்கதை. ஒரு கட்டத்தில் இவர்கள் செய்யும் இம்சை, 'அட சாமி எப்போ தான் படம் முடியுமோ' என்ற எண்ணத்தையே ஏற்படுத்துகிறது.