அமாவாசை தினத்தில் கண்டெடுக்கப்பட்ட பெருமாள் சிலை- இனி நல்லதே நடக்கும்!

அமாவாசை தினத்தன்று தெய்வங்களில் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் தங்கள் கிராமத்திற்கு இனி நல்லது நடக்கும் என்றும் தாங்கள் புண்ணியம் செய்துள்ளதாக கருதிய கிராம மக்கள் சாமி சிலைகளுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் போன்ற பூஜைகளையும் செய்தனர்.

Update: 2021-08-10 07:18 GMT

விருதுநகர் மாவட்டம் புளியங்குளத்தில் வயலை உழுதபோது அங்கு பெருமாள் சிலை உள்ளிட்ட சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் உள்ள நரிக்குடியை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது வயலை டிராக்டரால் உழுதார். பின்னர் மழை பெய்ததன் காரணமாக உழும் பணியை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மறுநாள் காலை வந்து தனது வயலை பார்த்தபோது அங்கு மண்ணில் புதைந்திருந்த சுவாமி சிலைகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் அங்கு கிடைக்கப்பெற்ற சிலைகளை ஆராய்ந்து அது 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலைகள் என்றும் அவை பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி சிலைகள் என்பதையும் உறுதிப்படுத்தினார். அமாவாசை தினத்தன்று தெய்வங்களில் சிலை கண்டெடுக்கப்பட்டு உள்ளதால் தங்கள் கிராமத்திற்கு இனி நல்லது நடக்கும் என்றும் தாங்கள் புண்ணியம் செய்துள்ளதாக கருதிய கிராம மக்கள் சாமி சிலைகளுக்கு மாலை அணிவித்து, பாலாபிஷேகம் போன்ற பூஜைகளையும் செய்தனர்.

சாமி சிலைகளை கண்டெடுக்கப்பட்ட செய்தி காட்டுத் தீயைப் போல் கிராமம் முழுவதும் பரவியதை தொடர்ந்து கிராம மக்கள் சிலை கிடைக்கப்பட்ட இடத்தில் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து திருச்சுழி தாசில்தார் முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் நிதி குமார் சிலைகளை கைப்பற்ற சென்றபோது அப்பகுதி கிராமத்தினர் சிலையை அதிகாரிகளிடம் ஒப்படைக்காமல் இருந்துள்ளனர்.

தங்கள் ஊரில் கிடைக்கப்பெற்ற சிலைகள் தங்கள் ஊரிலேயே வைத்து வழிபாடு செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகு சாமி சிலைகளை கிராமத்திலேயே ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அதிகாரிகள் சமரச பேச்சில் ஈடுபட்டதால் கிராமமக்கள் சிலையை அங்கிருந்து எடுத்து செல்ல அனுமதித்தனர்.

தற்போது திருச்சுழி தாலுகா அலுவலகத்தில் சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கிராமத்தில் சாமி சிலைகள் அம்மாவாசையன்று கிடைக்கப் பெற்றுள்ளதால் தங்களுக்கு புண்ணியம் கிடைத்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source : தினமலர்


IMAGE COURTESY : Dinamalar

Tags:    

Similar News