அருண் ஜெட்லி மறைவு: பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல்!
அருண் ஜெட்லி மறைவு: பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல்!
அருண் ஜெட்லி மறைவு: பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட அனைத்து கட்சி தலைவர்கள் இரங்கல்!! பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி, உடல்நல குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 66. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அருண் ஜெட்லி மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வலிமையுடனும், துணிவுடனும் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் போராடிய ஜெட்லியின் மறைவு வேதனை அளிக்கிறது. திறமையான வழிக்கறிஞர், தன்மையான எம்.பி. புகழ்மிக்க அமைச்சர். நாட்டை கட்டமைப்பதில் அவரின் பங்கு அளப்பிட முடியாதது.”என்று குறிப்பிட்டுள்ளார். வெங்கையா நாயுடு: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜெட்லியின் மறைவு, தேசத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பு. எனது சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர் திறமையானவர், சிறந்த நிர்வாகி” என்று குறிப்பிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி: அருண் ஜெட்லி மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து 4 பதிவுகளை வெளியிட்டுள்ளார். அந்த பதிவுகளில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டு இருப்பதாவது:- வாழ்க்கை முழுவதும் புத்திசாலித்தனமும், சிறந்த நகைச்சுவை உணர்வும் கொண்டவராக அருண் ஜெட்லி திகழ்ந்தார். அனைவரையும் தன் பக்கம் ஈர்க்கும் கவர்ச்சி கொண்டவர். அவர், சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் போற்றப்பட்டவர். இந்தியாவின் அரசியலமைப்பு, வரலாறு, பொதுக்கொள்கை, ஆளுகை மற்றும் நிர்வாகம் குறித்த ஆழ்ந்த அறிவு உடையவர். தனது நீண்ட அரசியல் வாழ்க்கையில், அருண் ஜெட்லி, பல துறைகளின் அமைச்சராக இருந்து திறம்பட செயல்பட்டவர். அது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், நமது பாதுகாப்பு திறன்களை வலுப்படுத்தவும், மக்கள் நட்பு சட்டங்களை உருவாக்கவும், பிற நாடுகளுடன் வர்த்தகத்தை மேம்படுத்தவும் உதவியது. அருண் ஜெட்லி, ஒரு சிறந்த அரசியல்வாதி. மிகச்சிறந்த அறிவாளி. சட்ட நுணுக்கம் அறிந்தவர். அவர் இந்தியாவுக்கு நீடித்த பங்களிப்பை வழங்கியவர். ஒரு வெளிப்படையான தலைவராக வளங்கியவர். அவரது மறைவு எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் மிகச்சிறந்த நண்பரை இழந்துவிட்டேன். அவரது மனைவி சங்கீதா மற்றும் மகன் ரோகரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தேன். அருண் ஜெட்லியின் ஆத்மா சாந்தியடையட்டும் https://twitter.com/narendramodi இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா: உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “அருண்ஜெட்லியின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. இது எனக்கு தனிப்பட்ட இழப்பு ஆகும். கட்சியின் மூத்த தலைவரை மட்டுமல்லாமல், ஒரு முக்கியமான குடும்ப உறுப்பினரையும் நான் இழந்துவிட்டேன். அவர் எப்போதும் எனக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பார்” என்று கூறி உள்ளார். ராஜ்நாத் சிங்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அருண் ஜெட்லி மறைவு தற்போதுதான் தெரியவந்தது. அவர், தேசத்திற்கும், அரசுக்கும், கட்சிக்கும் கிடைத்த சொத்து. ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்த டில்லி விரைய உள்ளேன்” என்றார். ஸ்மிரிதி இராணி: மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி கூறி உள்ள இரங்கல் செய்தியில், “அருண் ஜெட்லி, சிறந்த சொற்பொழிவாளராக விளங்கினார். சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர். அவர், தேசத்திற்கும், மக்களுக்கும் அர்ப்பணிப்பு மற்றும் வைராக்கியத்துடன் சேவை செய்தார். அவருக்கு எனது அஞ்சலி” என்று கூறி உள்ளார். அரவிந்த கெஜ்ரிவால்: டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மற்றும் மூத்த தலைவரான எஸ்.அருண் ஜெட்லியின் அகால மரணம் தேசத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும். சட்டம் மற்றும் ஒரு அனுபவமிக்க அரசியல் தலைவர். தனது ஆளுகை திறன்களுக்காக அறியப்படுபவர். துக்கமான இந்த தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், பிரார்த்தனைகளையும் தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் சுரேஷ் பிரபு: மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “எங்கள் அன்பான நண்பர், சட்ட மூளை உடையவர். கூர்மையான அறிவு, புத்திசாலித்தனம் உடையவர். அனுபவமுள்ள அரசியல்வாதி. முன்மாதிரியான நாடாளுமன்ற உறுப்பினர். அவரை ஒருபோதும் மறக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “அருண் ஜெட்லியின் இழப்பை எந்த வார்த்தைகளாலும் விவரிக்க முடியாது. நம்மில் பலருக்கு வழிகாட்டியாக இருந்தார். தார்மீக ஆதரவும், பலமும் அளித்து வந்தார். அவரிடமிருந்து அதிகம் கற்றுக்கொண்டேன். சிறந்த பெரிய, இதயமுள்ள நபர். அனைவருக்கும் உதவ எப்போதும் தயாராக இருப்பார். அவரது புத்திசாலித்தனமும், மதிநுட்பமும் யாரையும் ஒப்பிட முடியாது” என்று குறிப்பிட்டு உள்ளார். தமிழிசை சௌவுந்திரராஜன்: “அருண் ஜெட்லி மறைவு மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையும் அளிக்கிறது என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌவுந்திரராஜன்” கூறி உள்ளார். காங்கிரஸ் கட்சி: காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ள இரங்கல் செய்தியில், “அருண் ஜெட்லி காலமான செய்தியை கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்கள் இரங்கல். துயரமான இந்த நேரத்தில் நம் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவர்களுடன் உள்ளன” என்று கூறப்பட்டு உள்ளது. மம்தா பானர்ஜி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் ட்வீட்டில், “அருண் ஜெட்லி காலமானது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அவர் ஒரு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு சிறந்த வழக்கறிஞர் ஆவார். அனைத்து கட்சிகளாலும் பாராட்டப்பட்டார். இந்திய அரசியலுக்கு அவர் செய்த பங்களிப்பு நினைவுகூரத்தக்கது. அவரது மனைவி, குழந்தைகள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எனது இரங்கல்” என்று குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சர் பழனிசாமி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மறைவுக்கு, முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், “மாற்று கொள்கை கொண்டவர்களிடமும் அன்புடன் பழகக் கூடியவர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் ஜெயக்குமார்: தமிழக அமைச்சர் ஜெயக்குமார் தனது இரங்கல் செய்தியில், “அனைவரிடமும் எளிதாக பழகக் கூடியவர் அருண் ஜெட்லி. நல்ல மனிதரை நாடு இழந்து விட்டது. அருண் ஜெட்லியின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார். மு.க.ஸ்டாலின்:திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “ஜெட்லி மறைவு செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். பன்முக திறமை கொண்ட பண்பாளரும், சிறந்த பாராளுமன்ற வாதியான ஜெட்லியின் மறைவு, பா.ஜ.கவுக்கு ஈடு செய்ய முடியாதது” என்று குறிப்பிட்டுள்ளார். டி.ஆர்.பாலு: “அனைவரிடமும் எளிதாக பழக கூடியவர் அருண் ஜெட்லி. அவரின் மறைவு செய்து மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறியுள்ளார். ReplyForward |