கோர்ட்டு வாசலிலேயே, 10 அடி உயர ஈவேரா பேனர்! வழக்கறிஞர்கள் அடாவடி! நடவடிக்கை எடுக்குமா நீதிமன்றம்?

கோர்ட்டு வாசலிலேயே, 10 அடி உயர ஈவேரா பேனர்! வழக்கறிஞர்கள் அடாவடி! நடவடிக்கை எடுக்குமா நீதிமன்றம்?

Update: 2019-09-19 06:47 GMT


கடந்த 12-ஆம் தேதி, சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்ற சுபஸ்ரீ என்ற இளம்பெண், சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்தார். இது இந்திய அளவில் பெரும் விவாதப்பொருளாக ஆனது.


இந்த சம்பவத்திற்கு சென்னை ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. தமிழகம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள், பிளக்ஸ், கட் அவுட்டுகள், அலங்கார வளைவுகளை உடனே அகற்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தது.


 இதனைத்தொடர்ந்து மாநகராட்சி, நகராட்சி ஊழியர்களும், அதிகாரிகளும் காவல் துறையினரும் தமிழகம் முழுவதும், அனுமதி பெறாமல் சட்டத்திற்கு புறம்பாக வைத்திருந்த பேனர்கள், பிளக்ஸ்கள், கட்அவுட்கள், விளம்பர பலகைகள் போன்றவைகளை அப்புறப்படுத்தினர்.


ஆனால் சட்டம் பயின்றவர்கள், சட்டத்தை நிலைநாட்ட போராடுகின்ற வக்கீல்கள் சட்டத்திற்கு புறம்பாக பேனர் வைத்துள்ளனர். இந்த அடாவடியை அரங்கேற்றிய இடம் ஏதோ ஒரு சாலையின் ஓரம் அல்ல. கோர்ட்டு வாயிலில். அதுவும் கோர்ட்டு சுவர் மீதே!


கோவை கோர்ட் வாயிலில்தான், இந்த அட்டூழியம் அரங்கேறி உள்ளது. ஈவேராவின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 17-ஆம் தேதி, கோவையை சேர்ந்த வக்கீல்கள் சிலர், 10 அடி உயரமுள்ள பிளக்ஸ் பேனரை அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக கோர்ட்டு சுவர் மீது வைத்துள்ளனர்.


நீதிமன்றத்தின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரை பார்த்துவிட்டுதான், நீதிபதிகள், நீதிமன்றத்தினுள் செல்கின்றனர். ஆனால் அவர்கள் இதுவரை பேனர் வைத்த வக்கீல்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது வேதனையான ஒன்று. அது மட்டுமல்ல, “சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா வக்கீல்கள்?” என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்பு கின்றனர்.


இதுபோன்று சட்டத்திற்கு புறம்பான பேனர்களை வக்கீல்கள் வைப்பது இது முதல்முறையல்ல. பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.


வக்கீல்கள் வைத்துள்ள பேனர்கள் என்பதால் போலீசாரும், நீதிமன்ற நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. சட்டத்திற்கு புறம்பாக வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளேயே பேனர்களை வைத்து வருகின்றனர்.


தமிழகம் முழுவதும் பாகுபாடின்றி அனைத்து பேனர்கள், பிளக்ஸ்கள், கட்அவுட்களை அகற்றி வரும் வேளையில், நீதிமன்ற நுழைவு வாயிலில், அதுவும் நீதிமன்ற காம்பவுண்ட் சுவரின் மீது, 10 அடி உயரத்துக்கு புதிதாக பேனர் வைக்கப்பட்டுள்ளது கண்கூடாக தெரிந்திருந்தும், சட்டத்திற்கு புறம்பாக பேனர் வைத்த வக்கீல்கள் மீது நீதிபதிகள் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.


இது யோசிக்க வேண்டிய கேள்வி மட்டுமல்ல, நியாயமான கேள்வியும்கூட!


Similar News