விஜயின் பிகிலை 'பஞ்சர்' ஆக்கிய கைதி! முதல்வர் கனவுக்கு 'வேட்டு'!

விஜயின் பிகிலை 'பஞ்சர்' ஆக்கிய கைதி! முதல்வர் கனவுக்கு 'வேட்டு'!

Update: 2019-11-11 09:29 GMT

தீபாவளியை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக திரைக்கு வந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இந்தப் படம் திரையிடப்பட்டது.


பிகில் திரைப்படம் 180 கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்டதாக ஏஜிஎஸ் என்டர்டென்மென்ட் பட நிருவன கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி படம் வெளிவருவதற்கு முன்னதாக பெருமையுடன் கூறினார்.


ஆனால் படம் வெளியான பிறகு இதுவரை எவ்வளவு வசூல் ஆகியுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடவில்லை. நடிகர் விஜய் தரப்பிலிருந்தோ அல்லது அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தரப்பிலிருந்தோ வசூல் தொடர்பாக ஒரு வார்த்தை கூட வெளியாகவில்லை.


இதற்கிடையே உலகம் முழுவதும் பிகில் படம், ரூ.250 கோடி வரை வசூல் செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.


இது ஒருபுறமிருக்க தீபாவளியை முன்னிட்டு பிகில் படத்தோடு வெளியான நடிகர் கார்த்தியின் கைதி படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. கைதி படத்தில் கதாநாயகி இல்லை, பாடல்கள் இல்லை, நகைச்சுவைக் காட்சிகள் இல்லை... இப்படி ஏராளமான இல்லைகள் கைதி படத்தில் இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது மிகப் பெரிய வரவேற்பு.


கைதி படம் முதலில் தமிழகத்தில் 250 திரையரங்குகளில் மட்டுமே வெளியானது ஆனால் திரைக்கு வந்த சில நாட்களில் திரையரங்குகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. தேவி திரையரங்கு உள்பட தமிழகத்தின் பல திரையரங்குகளில் விஜயின் பிகில் படத்தை தூக்கிவிட்டு அந்த இடத்தில் கார்த்தியின் கைதி திரைப்படத்தை திரையிட்டனர். கைதி திரைப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது


தமிழகத்திற்கு வெளியே கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட இந்திய அளவிலும் கைதிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்ததுள்ளது. வெளி நாடுகள் பலவற்றிலும் கைதி, திரையிடப்பட்டு வருகிறது. இது நடிகர் கார்த்திக்கு மிகப்பெரிய ஒரு மைல்கல் படமாக அமைந்துள்ளது.


கைதி மிகக் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதாவது இந்த திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பளம் ரூ.60 லட்சம். இதர நடிகர்கர்கள் தொழில்நுட்ப கலைஞர்களின் மொத்த சம்பளம் ஒன்றரை கோடிக்கு மேல் இருக்காது என்கிறார்கள். மிக குறைந்த நாட்களில் இது படமாக்கப்பட்டுள்ளது. கார்த்தியின் சம்பளம் 10 கோடி என்று வைத்துக் கொண்டால்கூட இந்தப் படத்தின் மொத்த தயாரிப்புச் செலவு 15 கோடியை தாண்டாது.


ஆனால் கைதி திரைப்படம் இதுவரை 100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்துள்ளது.


பிகில் படத்தின் பட்ஜெட் ரூ.180 கோடி என்பதை அந்த தயாரிப்பு நிறுவனமே உறுதிசெய்து உள்ளது. அதன் விளம்பரச் செலவு மற்றும் இதர செலவுகள் எத்தனை கோடி என்பது தெரியவில்லை. அதோடு பிகில் படத்தின் வியாபாரம் எத்தனை கோடிக்கு நடந்தது என்பதையும் இதுவரை வெளியிடவில்லை.


ரூ.180 கோடிக்கு தயாரித்தவர்கள், பல கோடி ரூபாய்க்கு விளம்பரங்கள் செய்தவர்கள், நிச்சயமாக ரூ.250 கோடிக்கு மேல் வியாபாரம் செய்திருக்கக்கூடும். அதிகாரமற்ற தகவல்கள் இதுவரை ரூ 250 கோடிதான் வசூலாகியுள்ளது என்பது உண்மையாக இருந்தால்கூட அந்தப் படம் வியாபாரமான தொகையை ஈடிகட்டியிருக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர்  விநியோகஸ்தர்கள்.


 இதனால் பிகில் திரைப்படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்கள் ஒவ்வொருக்கும் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வரை நஷ்டம் வர வாய்ப்புள்ளது என்பது விநியோகஸ்தர்கள் தரப்பு தகவலாக உள்ளது. தீபாவளிக்கு பிகில் மற்றும் கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியான நிலையில், விஜய்யின் பிகில் படத்திற்கு இந்த நிலை என்றால், மேலும் இரண்டு மூன்று படங்கள் திரைக்கு வந்திருந்தால், பிகில் படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்து இருக்கும் என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.


அதேநேரம் வெறும் 15 கோடி ரூபாயில் தயாரான கைதி படம் ரூ.100 கோடியை தாண்டி தொடர்ந்து வசூலை குவித்து வருகிறது. இது விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மிகப் பிரம்மாண்ட கமர்சியல் படம் பிகில். கதாநாயகன் விஜய். கதாநாயகி நயன்தாரா. இசை ஏ.ஆர்.ரகுமான். இயக்குனர் அட்லி. இவர்களுடன் ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள். ஆனால் படம் வெற்றிப்படமாக அமையவில்லை.


எனவே பஞ்ச் டயலாக் பேசியே முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என்று கனவு கண்டுகொண்டு இருந்த நடிகர் விஜய்க்கு, இந்த படம் மிகப்பெரிய பாடத்தை கற்பித்து உள்ளது. யாரை எங்கே வைக்க வேண்டும் என்பதை ரசிகர்கள் தெளிவாக தீர்மானிக்கின்றனர் என்கின்றனர் நடுநிலையாளர்கள்.


Similar News