இலங்கை அகதிகள் குடியுரிமை தொடர்பில் 40 நிமிடங்களுக்கு மேல் பேசிய சுஸ்மா ஸ்வராஜ் - நெகிழ வைத்த தமிழக பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா!
இலங்கை அகதிகள் குடியுரிமை தொடர்பில் 40 நிமிடங்களுக்கு மேல் பேசிய சுஸ்மா ஸ்வராஜ் - நெகிழ வைத்த தமிழக பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா!
இலங்கை அகதிகளின் குடியுரிமை பிரச்சனை குறித்து, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் அவர்களிடம் பேசிய அனுபவம் குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் தமிழக பா.ஜ.க இளைஞரணி துணைத்தலைவர் எஸ்.ஜி. சூர்யா.
இலங்கை தமிழர்களின் பிரச்சனை:
இலங்கையில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகள் தொடங்கியது முதல், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் இலங்கை அகதிகள் வசித்துவருகிறார்கள். அவர்கள் வசிக்கும் முகாம்களின் மோசமான நிலை, முகாம்களை விட்டு வெளியில் சென்றுவருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள், குறைந்த அளவிலான வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் போன்றவை அவர்களைப் பாதித்திருக்கின்றன.
தமிழகத்தில் அகதிகளாக:
தமிழ்நாட்டில் உள்ள 107 முகாம்களில் வசிக்கும் சுமார் 62,000 அகதிகள் மத்திய, மாநில அரசுகளிடமிருந்து பல்வேறு நிவாரண உதவிகளைப் பெறுகிறார்கள். கடந்த சில ஆண்டுகளில், அகதி முகாம்களைச் சேர்ந்த பல மாணவ, மாணவிகள் தொழில்சார் பட்டப் படிப்புகளில், குறிப்பாகப் பொறியியல் படிப்புகளில் சேரும் வகையில் தமிழக அரசு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. தமிழகத்தில் முகாம்கள் அல்லாத வெளியிடங்களில் தங்கியிருக்கும் அகதிகள் சமூகத்தைச் சேர்ந்த 36,800 மாணவர்களும் இதில் பலனடைந்திருக்கிறார்கள்.
முக்கிய கவலை:
வீடுகளின் தரம், பணிகளின் தன்மை ஆகியவற்றை எல்லாம் தாண்டி, இலங்கை அகதிகள் வாழ்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்திருக்கிறார்கள். அத்துடன், முழுக்க தமிழ்நாட்டிலேயே வளர்ந்த ஒரு புதிய தலைமுறை உண்டு. யாழ்ப்பாணம், முல்லைத் தீவு நகரங்களின் நினைவுடன் வாழும் தங்கள் பெற்றோர்போல் அல்லாமல், இலங்கை என்பது அவர்களுக்குக் கிட்டத்தட்ட வேற்று நாடுதான் என்று சொன்னால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இலங்கையில் வாழ்வாதாரத்துக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்பதுதான் அகதிகளின் முக்கியக் கவலை. அகதிகளுக்கான ஐநா ஆணையம் 2015-ல் இலங்கை திரும்பிய அகதிகளிடம் நடத்திய ஆய்வில், அங்கு வாழ்வாதார வாய்ப்புகள் மிகக் குறைவாக இருக்கின்றன என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இலங்கையின் பொருளாதார நிலையை வைத்துப் பார்க்கும்போது, இந்த நிலைமையில் தற்போதைக்கு முன்னேற்றம் இருக்காது என்றே தெரிகிறது.