மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது சேப்பாக்கம் !!

மூன்றாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது சேப்பாக்கம் !!

Update: 2019-08-12 06:45 GMT

திருநெல்வேலி: டி.என்.பி.எல்., தொடரின் பைனலுக்கு சேப்பாக்கம் அணி முன்னேறியது. தகுதிச் சுற்று–1ல், 5 ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தியது.


தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.,) ‘டுவென்டி–20’ கிரிக்கெட் தொடரின் 4வது சீசன் நடக்கிறது. திருநெல்வேலியில் நடந்த தகுதிச் சுற்று–1ல் சேப்பாக்கம், திண்டுக்கல் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சேப்பாக்கம் அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.


ஸ்ரீதர் ராஜு அரைசதம் அடித்தார். சேப்பாக்கம் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 169 ரன்கள் எடுத்தது. முருகன் அஷ்வின் (14) அவுட்டாகாமல் இருந்தார். திண்டுக்கல் அணி சார்பில் ஹரி நிஷாந்த், பிரனேஷ் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.


ஜெகதீசன் ஆறுதல்: சவாலான இலக்கை விரட்டிய திண்டுக்கல் அணிக்கு ஹரி நிஷாந்த், நாராயணன் ஜெகதீசன் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. அலெக்சாண்டர் வீசிய 5வது ஓவரில் தொடர்ச்சியாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த ஜெகதீசன், பெரியசாமி வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது முருகன் அஷ்வின் ‘சுழலில்’ ஜெகதீசன் (37) போல்டானார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஹரி நிஷாந்த் (29) ஓரளவு கைகொடுத்தார்.


விவேக் (20), கேப்டன் அஷ்வின் (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. சுமந்த் ஜெயின் (13), சதுர்வேத் (14) நிலைக்கவில்லை. பெரியசாமி பந்தில் ரோகித் ராமலிங்கம் (1) போல்டானார். கடைசி ஓவரில் திண்டுக்கல் அணியின் வெற்றிக்கு 21 ரன் தேவைப்பட்டது. ஹரிஷ் குமார் வீசிய 20வது ஓவரில், 15 ரன் மட்டுமே கிடைத்தது.


திண்டுக்கல் அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 164 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. சேப்பாக்கம் அணி சார்பில் பெரியசாமி 3 விக்கெட் கைப்பற்றினார்.


மூன்றாவது முறை
டி.என்.பி.எல்., வரலாற்றில் 3வது முறையாக (2016, 2017, 2019) பைனலுக்கு முன்னேறியது. இதில் 2016ல் பைனலில் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்த சேப்பாக்கம் அணி, 2017ல் கோப்பை வென்றது.


Similar News