1984, 1989, 1991, 1996, 1998, 2004, 2009 என 7 முறை சிவகங்கை தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 மக்களவைத் தேர்தலில் தமாகா - விசிக - புதிய தமிழகம் கூட்டணியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பனிடம் தோல்வி அடைந்தார். தேர்தல் அரசியலில் சிதம்பரத்தின் முதல் தோல்வி இது. 2014 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதி, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு ஒதுக்கப்பட்டது. அதனால், அவர் போட்டியிடவில்லை. அதைத் தொடர்ந்து 2016 ஜூலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு சிதம்பரம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1984-ல் முதல்முறையாக எம்.பி.யான சிதம்பரம், 1985-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். 1986 முதல் 1989 வரை மத்திய இணை அமைச்சராக பதவியில் இருந்தவர் , பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தம், உள்துறை போன்ற பல்வேறு துறைகளை கவனித்தார். 1991 முதல் 1996 வரை நரசிம்ம ராவ் அமைச்சரவையில் வர்த்தகத் துறை இணை அமைச்சராக இருந்தார்.
1996-ல் அதிமுக – காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்த ஜி.கே.மூப்பனார், தமாகா என்ற தனிக் கட்சியை தொடங்கினார். இதற்கு சிதம்பரம் முக்கிய காரணமாகவும், உறுதுணையாகவும் இருந்தார். 1996-ல் திமுகவுடன் கூட்டணி அமைத்த தமாகா, 20 எம்.பி.க்களைப் பெற்றது. தேவகவுடா தலைமையிலான அமைச்சரவையிலும், ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவையிலும் மத்திய நிதி அமைச்சராக சிதம்பரம் பணியாற்றினார்.
1999-ல் அதிமுக – தமாகா கூட்டணியை எதிர்த்து காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது திமுக கூட்டணியில் பா.ஜ.க வும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் 2004-ல் மீண்டும் காங்கிரஸில் இணைந்த சிதம்பரம், 2004 முதல் 2014 வரை மன்மோகன் சிங் அமைச்சரவையில் நிதி, உள்துறை போன்ற முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்தார். 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட பெற முடியாமல் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது.
பா.ஜ.க ஆட்சி அமைந்ததும், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு சட்ட விரோதமாக அந்நிய முதலீடு பெற நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில்தான் அவருக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது.
பன்முகத்தன்மை
ப.சிதம்பரத்தின் ஒரே மகன் கார்த்தி சிதம்பரம், தற்போது சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினராக இருக்கிறார். அவர் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் கடந்த 2018-ல் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். முன்னாள் முதல்வர் கருணாநிதி, இவரை கடுமையாக விமர்சித்திருந்தாலும், பாராட்டவும் செய்துள்ளார்.
ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோதுதான் அன்றைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, அம்மாநில உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீது குஜராத் கலவர வழக்கு, போலி என்கவுன்ட்டர் வழக்கு ஆகியவற்றில் சி.பி.ஐ தனது பிடியை இறுக்கியது. அமித்ஷா கைது செய்யப்பட்டு அமைச்சர் பதவியை இழந்தார். குஜராத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலையும் ஏற்பட்டது.
அன்று ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சர். சிபிஐ பி டியில் அமித்ஷா இருந்தார். இன்று நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சர். சிபிஐ பிடியில் ப.சிதம்பரம் சிக்கியுள்ளார்.
பலமுறை பிரதமர் பதவிக்கு பேசப்பட்டவர் ப.சிதம்பரம். ஆனால், அது கைகூடவில்லை. தற்போது 2-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் பா.ஜ.க ஆட்சிக்கு வந்துள்ளதால் சிதம்பரம் மீதான வழக்குகள் வேகம் பெற்று அவருக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இது அவருக்கு மட்டுமல்ல, காங்கிரஸுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. சாம்ராஜ்ஜியம் சரிந்தது