சிதம்பரம், டி.கே சிவக்குமார் கமல்நாத் மருமகன் ரதுல் பூரி, அடுத்தது யார்? ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சி.பி.ஐ

சிதம்பரம், டி.கே சிவக்குமார் கமல்நாத் மருமகன் ரதுல் பூரி, அடுத்தது யார்? ஸ்கெட்ச் போட்டு தூக்கும் சி.பி.ஐ

Update: 2019-09-04 02:57 GMT

ஐ.என்.எக்ஸ் மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர். கமல் நாத் மருமகன் ரதுல் பூரி, கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோரை கைது செய்துள்ளது , பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் ஊழல், மோசடி தலைகள் பல அடுத்தடுத்து உருளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


டி.கே.சிவக்குமார்:
கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக காங்கிரஸ் முக்கிய தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். புதுடில்லியில் 4 நாட்களாக நடந்த தொடர் விசாரணைக்கு பின் சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.


கமல்நாத் மருமகன் ரதுல் பூரி:
காங்கிரஸ் மூத்த தலைரும், மத்திய பிரதேச மாநில முதல்வருமான கமல்நாத்தின் மருமகன் ரதுல் பூரி. இவர் மீதும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு உள்ளது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்


இதுபோல் அடுத்தடுத்து கைது செய்ய மிக பெரிய லிஸ்டை வைத்துள்ளது அமலாக்க துறை மற்றும் சிபிஐ . இந்த வேட்டை தொடரும் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இந்நிலையில் அடுத்தது யார் என்ற பரபரப்பு இந்தியா முழுவதும் தொற்றி கொண்டுள்ளது. இதனால் ஊழல் அரசியல்வாதிகள் கடும் பீதியில் உறைந்து கிடக்கின்றனர். எப்போது சிபிஐ நம் வீட்டுக்கு வரும் என்ற பீதியில் உள்ளனர்.


கார்த்தி சிதம்பரம்:



ஐ.என்.எக்ஸ் மோசடி வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே கைதானார். ஐ.என்.எக்ஸ் மோசடி வழக்கு தவிர மேலும் பல வழக்குகளிலும் கார்த்தி சிதம்பரத்திற்கும், ப.சிதம்பரத்திற்கும் தொடர்பு உள்ளதால், அந்த வழக்குகளிலும் சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியா தவிர வெளிநாடுகளிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் கார்த்தி சிதம்பரத்திற்கு உள்ளதால் அவை தொடர்பான வழக்குகளிலும் ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் சிக்கி உள்ளனர்.


ராபர்ட் வதேரா:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா, லண்டனில் சொத்துகள் வாங்கியது தொடர்பான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.


கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் :
இதேபோல 2ஜி வழக்கு மெல் முறையீட்டில் அதிகமான ஆவணங்களை சி.பி.ஐ சேகரித்து உள்ளது. இதனால் 2ஜி ஊழல் வழக்கில் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் இனி தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை விரைவாக நடத்தி முடிக்க கோர்ட்டில் சி.பி.ஐ முறையிட்டு உள்ளது. இதனால் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


அகிலேஷ் யாதவ்:
சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக, 2019 ஜனவரி 17-இல் அமலாக்கத்துறை, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில், 2012 – 16 காலகட்டத்தில், சுரங்க முறைகேடு தொடர்பாக அகிலேஷ், அப்போது கனிம வளத்துறை அமைச்சர் பதவி வகித்தவரிடம் விசாரணை நடத்தும் வகையில், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி, அரசு அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.


மாயாவதி:
உத்தரபிரதேச முதல்வராக மாயாவதி இருந்த 2007 – 12 காலகட்டத்தில், மாநிலத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் கன்ஷிராம் மற்றும் கட்சி சின்னத்தை பிரபலபடுத்தும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.111.44 கோடி இழப்பு ஏற்பட்டது என மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.


இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மாநிலத்தின் 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.


2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் மாயாவதியின் சகோதரர் அனந்த் குமார், பெயரில் இருந்த ரூ.400 கோடி மதிப்புள்ள பினாமி சொத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.


வீர்பத்ரசிங்:
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ரசிங் அவரது மனைவி பிரதிபா உள்ளிட்டோர் மீது 2015 ஆண்டு, செப்டம்பர் மாதம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீர் பத்ர சிங், மத்திய அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் கூறப் பட்டது. இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. வழக்கு விசாரணை நடந்து வருகிறது.


பூபிந்தர் சிங் ஹூடா:


சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தம் தொடர்பாக, அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.


ஊழல் தடுப்பு சட்டம், கிரிமினல் சதி, மோசடி ஆகியவற்றின் கீழ் கூர்கானில் ஹூடாவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், பணமோசடிதடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், கடந்த ஜூலை மாதம் ரூ.66.57 கோடி மதிப்புள்ள சொத்தை முடக்கினர். இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது.


அகமது படேல்:


விவிஐபிக்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வாங்கியதில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சோனியாவின் ஆலோசகம் அகமது படேல் பெயர் இடம்பெற்றுள்ளது. வழக்கு விசாரணையில் உள்ளது.


ரேவந்த் ரெட்டி:


தெலுங்கானா மாநில காங்கிரஸ் நிர்வாகியான ரேவந்த் ரெட்டி, ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், கடந்த 19-ஆம் தேதி அமலாக்கத்துறை முன்னர் ஆஜரானார். 2015-இல் தெலுங்கு தேசம் கட்சியில்இருந்தபோது, தெலுங்கானா சட்ட மேலவைக்கு, நடந்த தேர்தலில் தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப்போட லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. 2018 செப்டம்பர் மாதத்தில் ரேவந்த் ரெட்டியிடம் வருமான வரித்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.


சசிதரூர்:


காங்கிரசின் மற்றொரு முக்கிய தலைவர் சசிதரூர். டெல்லி ஓட்டலில் மர்மமான முறையில், இவரது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் அடைந்தது தொடர்பாக கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ.க மூத்த எம்.பி. சுப்ரமணியன்சாமி கூறினார்.


ஜனவரி 2015-இல் அப்போதைய போலீஸ் கமிஷனர் பாஸி, சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டதாக கூறினார். இந்த விவகாரத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கும் விசாரணையில் உள்ளது.


இப்படி இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.


Similar News