மதுரை சித்திரை திருவிழா: தேர்தல் தேதியை தள்ளி வைப்பதில் தவறில்லை : Dr. தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

மதுரை சித்திரை திருவிழா: தேர்தல் தேதியை தள்ளி வைப்பதில் தவறில்லை : Dr. தமிழிசை சவுந்தரராஜன் கருத்து

Update: 2019-03-12 19:22 GMT

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-


பா.ஜ.க தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்படுவார்கள். பிரதமர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தேர்தல் பிரசாரத்துக்கு வர உள்ளனர். அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜனதா, தே.மு.தி.க., புதிய தமிழகம் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.


 16 மாநிலங்களில் ஆளும்கட்சியை ‘டார்ச் லைட்’ அடித்து தேட வேண்டும் என்று கமல்ஹாசன் சொல்கிறார். ஒரு கட்சியின் வளர்ச்சியில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் கட்சியிலேயே இல்லாதவர்கள் விமர்சனம் செய்வது எப்படி சரியாக இருக்கும்?. திருப்பரங்குன்றம் தேர்தலில் நியாயம் கிடைக்க வேண்டும் என்று வழக்கு போட்டதே தி.மு.க. தான். வழக்கு நடக்கும்போது தேர்தலை நடத்துவது இல்லை என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பது தி.மு.க.வின் வேலையாக உள்ளது.


மதுரையில் சித்திரை திருவிழாவின் போது தேர்தல் நடப்பது இடையூறாக தான் இருக்கும். மாவட்ட கலெக்டர் முன்கூட்டியே இதுகுறித்து தகவல் கொடுத்திருந்தால் தேர்தல் ஆணையம் தேதியை கவனமாக அறிவித்து இருக்கும். மதுரை சித்திரை திருவிழா தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் விழா என்பதால் தேர்தல் ஆணையம் என்ன முடிவு செய்கிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இப்போது கவனத்துக்கு வருவதால் தேர்தலை தள்ளிவைப்பதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



Similar News