ஏர் இந்தியா பெண் மேலாளரிடம் அநாகரிகமாக நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ !
ஏர் இந்தியா பெண் மேலாளரிடம் அநாகரிகமாக நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ !
சத்தீஸ்கரின் மகாசமுண்ட் சட்டமன்றத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ வினோத் சந்திரக்கர் சென்ற 7 ஆம் தேதி ராய்ப்பூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா பெண் ஊழியரை அவமானப்படுத்தியதுடன், தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : எம்எல் ஏ முன் கூட்டியே விமானத்தில் நுழைவதற்கான டோக்கன் மாலை 5.36 மணிக்கு தரப்பட்டிருந்தது. ஆனால் விமானம் புறப்படும் நேரத்தில் எம் எல் ஏ உட்பட 5 பயணிகள் உரிய நேரத்தில் வரவில்லை. 6.12 மணிக்கு பாதுகாப்பு ஆய்வுப் பகுதி மற்றும் செக் இன் ஏரியா பகுதியில் மீண்டும் மீண்டும் இது குறித்து அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாங்கள் அனைவரும் வழியில் வந்து கொண்டிருப்பதாக அவர்களில் ஒரு பயணி தகவல் அளித்ததை அடுத்து விமான நிலைய மேலாளர், ராய்ப்பூர், (ஏர் இந்தியா பெண் அதிகாரி ) மற்றும் ஏர் இந்தியாவின் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெடின் (ஏஐஏடிஎஸ்எல்) பொறுப்பான மற்ற வாடிக்கையாளர் சேவை முகவர்கள் (சிஎஸ்ஏ) அவர்களுக்காக காத்திருந்தனர்.
ஆனால் அந்த 5 பயணிகள் 6 :13 மணி வரை வரவேயில்லை. விமான நிலைய மேலாளர் (ஏபிஎம்) உட்பட மற்ற அனைத்து ஊழியர்களும் விமானத்திற்குச் சென்றிருந்தனர்; 6 :15 மணி அளவில் டிரிம் வெளியே எடுக்கப்பட்டது; விமான கதவு 6 :18 மணிக்கு மூடப்பட்டது, மேலும் விமானம் 6:30 மணிக்கு புறப்பட்டது ”
விமானம் புறப்பட்டதும் உள்ளே வந்த எம்எல்ஏவிடம் விமானம் சென்றுவிட்டதால் உள்ளே நுழைய அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த எம்எல்ஏ பெண் அதிகாரி என்றும் பார்க்காமல் விமான நிலைய அதிகாரியுடன் சண்டை பிடித்துள்ளார். அப்போது தரக்குறைவாகவும், அவமானகரமாகவும் பெண் அதிகாரியை திட்டியுள்ளார். இவை அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.