ஹிந்து மதமும் திராவிடமும்! - தி.மு.க PTR தியாகராஜன் உரைக்கு எதிர்வினை!
ஹிந்து மதமும் திராவிடமும்! - தி.மு.க PTR தியாகராஜன் உரைக்கு எதிர்வினை!
மதுரை சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளருமான திரு.தியாகராஜன் அண்மையில் இந்து மதமும் திராவிடமும் என்று நீண்ட ஒரு உரையாற்றினார். தற்போதைய தி.மு.க-வில் ஹிந்து சமயம் சார்ந்து பசக்கூடிய திறனும், வரலாறு கொண்ட ஒரே நபர் இவர்தான். இவரின் கொள்ளுத் தாத்தா காலம் தொட்டே ஆன்மீகப் பணிகளையும் செய்து வந்துள்ளனர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. துர்கா ஸ்டாலின் போல தி.மு.க-வின் ஆன்மீக முகமான இவரின் பேச்சிலுள்ள பல செய்திகள் வேறு திராவிடப் பேச்சாளர்களுக்குத் தெரியாது என்பது தான் வருத்தம் தருகிறது. தி.மு.க ஹிந்துக்களின் எதிரியல்ல, ஹிந்து மதத்தை வளர்த்து ஜனநாயகப்படுத்தியுள்ளது என்கிறார், மேலும் அறநிலையத்துறையை அரசு வைத்துக் கொண்டிருப்பதையும் நியாயப்படுத்துகிறார். ஹிந்து சமய அறநிலையத்துறையின் சீர்கேடுகளையும், திராவிடம் ஹிந்து சமயத்திற்குச் செய்த ஈடர் குறித்தும் விளக்க இந்த ஒரு கட்டுரை போதாது, ஆக அதைத் தவிர்த்து இவர் பேச்சில் உள்ள சமகால அரசியலை மட்டும் இங்கே பார்ப்போம்.
அவரின் பேச்சு இதோ:
பெண்களுக்கு ஓட்டுரிமையைக் கொடுத்தது நீதிக் கட்சி என்கிறார். இடுப்பு கிள்ளும் தி.மு.க தொண்டர் இச்செய்தியைப் படித்துத் திருந்துவதற்காகக் கூறினாரா எனத் தெரியவில்லை. ஆனால் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே பிரிடிஷ் அரசு இங்கிலாந்தில் பெண்களுக்கான ஓட்டுரிமையைக் கொடுத்துவிட்டு மாண்டேக் செம்ஸ்போர்ட் சீர்திருத்தத்திலும் பரிந்துரைத்ததன் அடிப்படையில் நீதிக்கட்சி செயல்பட்டுள்ளது என்பது வரலாறு. மேலும் அவர்கள் செய்த எல்லாவற்றையும் அதாவது 1938 பெரியார் தலைவராவதற்கு முன் நீதிக் கட்சி செய்த எல்லாவற்றையும் திராவிடக் கணக்கில் எழுதிக் கொள்கிறார். அண்மையில் தேர்தல் செலவு கணக்கைக் கம்யூனிஸ்ட் கணக்காக எழுதியது போல எனலாம்.
புரியாத மொழியிலிருந்து மாற்றி தமிழில் அர்ச்சனை செய்ய வைத்ததால் தி.மு.க ஹிந்து சமயத்திற்கு நன்மை செய்தது என்கிறார். அப்படியெனில் உருதிலிருந்து தமிழில் ஓதவைத்தால் சகோதர மதத்திற்கும் நன்மை கிடைக்குமே? ஆனால் உருது கட்டாயப் பாடமாக்கப்படும் என்றல்லவா வாக்குறுதி அளித்தனர், அளிக்கின்றனர்?
திராவிடக் கட்சியில் கொள்கையால் தான் மற்ற மாநிலக் காங்கிரஸை விட அன்றைய தமிழக காங்கிரஸ் திராவிடக் கொள்கை சார்ந்து செயல்படுகிறது என்கிறார். இதன் மூலம் காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிழதலில் அ.தி.மு.க வெளியிட வைத்ததைத் தங்கள் கணக்கில் கொள்வது போல காங்கிரஸ் செய்தவற்றையும் தங்கள் கணக்கில் எழுத முயல்கிறார். ஆனால் உண்மையில் இதுவரை ஹிந்துக்களுக்கு செய்ததாகப் பேசாத தி.மு.க, ஹிந்துக்களுக்கு எதிரியில்லை என்று பேசாத தி.மு.க இன்று ஹிந்து மதத்திற்குத் திராவிடம் பல நன்மைகளைச் செய்தது என்று சொல்ல வருகிறது என்றால் யாருடைய கொள்கைக்கு ஈடுகொடுக்க மாறியது என்பதை உடன்பிறப்புகள் யோசிக்க வேண்டும்.
தமிழகம் போல கோவில்களை அரசு எடுக்காததால் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் எல்லாம் கோட்டைகள் அதிகம் கோவில்கள் குறைவு என்கிறார். அங்கெல்லாம் கோவில்கள் அதிகம் இருந்தன என்று எதன் அடிப்படையில் கூறுகிறார் எனத் தெரியவில்லை, ஆனால் முகலாயப் படையெடுப்பில் சிதைந்த கோவில்களைக் கணக்கில் கொண்டிருக்கலாம். சரி அதே தமிழகத்தில் தான் சிலை திருட்டு மற்ற மாநிலங்களை விட அதிகம் நடந்துள்ளது என்பதைப் பொருத்திப் பார்க்க வேண்டாமா?