"மாடுகள் விவசாயம் தான் என் உயிர் மூச்சு" - அமெரிக்க பெண்ணை அசர வைத்த எடப்பாடி
"மாடுகள் விவசாயம் தான் என் உயிர் மூச்சு" - அமெரிக்க பெண்ணை அசர வைத்த எடப்பாடி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ளார், சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக, கடந்த செப்டம்பர். 1-ம் தேதி அமெரிக்கா சென்றார். அவர் அங்கு செப்.7-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
சேலத்தில் அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவுக்கு தேவைப்படும் தொழில்நுட்பம் பற்றி அறிந்து கொள்ள பல்வேறு அமெரிக்க கால்நடைப் பண்ணைகளுக்கு நேரடியாக விசிட் அடிக்கிறார்.
நியூயார்க்கில் நடைபெறும் அமெரிக்க தமிழ் முனைவோர் கூட்டமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர், தமிழகத்தில் தொழில் தொடங்குவதன் சாதகத்தைப் பற்றி பேச உள்ளார். இதன் தொடர்ச்சியாக, நியூயார்க் தொழில் முதலீட்டாளர்கள், கேட்டர்பில்லர், ஃபோர்டு, ஃபாக்ஸ்கான், லிங்கன் எலெக்ட்ரிக் நிறுவன உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
செப்டம்பர் 2-ம் தேதி, நியூயார்க் மாகாணம் பஃப்பலோ நகரிலுள்ள ‘லாம்ப்ஸ்’ கால்நடைப் பண்ணைக்கு விசிட் அடித்த முதல்வர் தலைமையிலான குழு, அங்கு மேற்கொள்ளப்படும் உயர் தொழில்நுட்ப கால்நடை வளர்ப்பு குறித்து கேட்டறிந்தது. கன்றில் தொடங்கி, அது பசுவாக வளர்த்து, பால் கறப்பது வரை மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், தினமும் அளிக்கும் தீவனம், பால் கறப்பதில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பம் குறித்து, ‘லாம்ப்ஸ்’ கால்நடைப் பண்ணை அதிகாரிகள் முதல்வருக்கு விளக்கினர்.
அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயக்குமார், எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் சண்முகம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை செயலாளர் கோபால் உள்ளிட்டோர் முதல்வருடன் இருந்தனர்.
கன்றுகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவும், அவை வளர்க்கப்படும் முறை குறித்தும் முதல்வர் ஆர்வமாகக் கேட்டறிந்தார். எவ்வளவு கால இடைவெளியில் மாடுகளுக்கு நோய் தடுப்பு ஊசி போடப்படுகிறது? பால் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்கிறார்கள்? என்பதையெல்லாம் கேட்டார்.