வரலாற்றுச் சிறப்பு மிக்க DIN நடைமுறை இன்றிலிருந்து அமலாகிறது! அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் உருவாக்கப்பட்டது !
வரலாற்றுச் சிறப்பு மிக்க DIN நடைமுறை இன்றிலிருந்து அமலாகிறது! அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் உருவாக்கப்பட்டது !
பல்வேறு சிக்கல்களை களைந்து புதிய டிஜிட்டல் முறையில் புள்ளிவிபர பட்டியல் தயாரிக்க வழி காணும் வகையில், மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்டுள்ள மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் ஆவண அடையாள எண் (DIN) இன்று நவம்பர் 8 ந்தேதி, 2019 வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.
மறைமுக வரிகள் நிர்வாகத்தை சீர்திருத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய DIN நடைமுறை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது என மத்திய வருவாய்த் துறை செயலாளர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், மத்திய மறைமுக வரிகள் வாரியத்தால், இனி அனுப்பப்படும் அனைத்துத் தகவல்களும், ஆவண அடையாள எண் கொண்டதாகவே இனி இருக்கும் என்றார்.
நேரடி வரிகள் நிர்வாகத்தில் இந்த ஆவண அடையாள எண் நடைமுறை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. மறைமுக வரிகள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத்தை பரவலாகப் பயன்படுத்தி இந்த அடையாள எண் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய நடைமுறை அமலுக்கு வந்திருப்பதையடுத்து, மறைமுக வரிகள் வாரியத்தால் இனி மேற்கொள்ளப்படும் சோதனைகள், சம்மன், கைது உத்தரவுகள், ஆய்வு நோட்டீஸ் மற்றும் கடிதங்கள் தொடர்பான விசாரணைக்கு ஆவண அடையாள எண் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே கூறினார்.
ஜி.எஸ்.டி அல்லது சுங்கத்துறை அல்லது மத்திய கலால் துறையால் அனுப்பப்படும் அனைத்து கடிதப் போக்குவரத்துகளிலும், கணினி மூலம் உருவாக்கப்பட்ட ஆவண அடையாள எண் இல்லாத கடிதங்கள் இனிமேல் செல்லாதவையாக கருதப்படும் என்றும் அவர்கூறினார்.
இந்த DIN நடைமுறை முறையான தணிக்கை மேற்கொள்வதற்கான டிஜிட்டல் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை தயாரிக்க உதவும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் திரு பிரணாப் கே தாஸ் அவர்களும் கூறியுள்ளார்.