சின்னாபின்னமாகிறது தினகரன் கட்சி! புகழேந்தியும் நடையை கட்டுகிறார்!!

சின்னாபின்னமாகிறது தினகரன் கட்சி! புகழேந்தியும் நடையை கட்டுகிறார்!!

Update: 2019-09-09 10:17 GMT


அ.தி.மு.கவில் இருந்து தினகரன் பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை தொடங்கினார். சசிகலாவின் ஆலோசனையில் தொடங்கப்பட்ட இந்த கட்சியில் அ.தி.மு.கவின்  பல எம்.எல்.ஏக்களும், பல தலைவர்களும் அ.ம.மு.கவில் இணைந்தனர்.


கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க சில இடங்களில் வெற்றிபெறும் என்றும் இடைதேர்தல் நடந்த சட்டசடை தொகுதிகளிலும் பல இடங்கள் கிடையும் என்று எதிர் பார்க்கப்பட்டது.


 ஆனால் தேர்தல் முடிவு வேறுவிதமாக இருந்தது. தினகரனுக்கு படுதோல்விதான் மிஞ்சியது.


இதனைத்தொடர்ந்து தங்க தமிழ் செல்வன், தினகரனுக்கு எதிராக போர்கொடி தூக்கினார். பின்னர் அவர் தி.மு.கவில் ஐக்கியமானார். அவரைத் தொடர்ந்து பலர் வெவ்வேறு கட்சிகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.


இந்த நிலையில் தினகரனுக்கு வலது கரமாக விளங்கிய புகழேந்தியும் அ.ம.மு.கவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். இதுதொடர்பாக கட்சியில் உள்ள அதிர்ப்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார்.


இது தொடர்பான விடியோ வெளியானது. இதனால், புகழேந்தி ஆத்திரம் அடைந்துள்ளார். அவர் தினகரனை கடுமையாக விமர்சித்துள்ளார்.


இதுதொடர்பாக புகழேந்தி, தருமபுரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-


கோவையில், அதிருப்தியில் இருந்த கட்சி நிர்வாகிகளை நான் சந்தித்து பேசினேன். கட்சிக்காக நீண்டகாலம் உழைத்தவர்களை கட்சியைவிட்டு நீக்கி உள்ளனர். அவர்கள் தங்களது மனக்குமுறலை என்னிடம் வெளிப்படுத்தினார்கள். இதனால் அவர்களை நேரடியாக சந்தித்து பேசினேன்.


அவர்களை நான் சந்தித்து பேசிய வீடியோவை, அ.ம.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. இது, என்னை அசிங்கப்படுத்துவதாக உள்ளது.


அந்த வீடியோவை வெளியிட்டது, எந்த விதத்தில் நியாயம்? கட்சிக்காக போராடி சிறை சென்றவர்களை நீக்கியதே தவறு. அவர்களை சந்தித்து நான் பேசியதை வெளியிட்டது அதைவிட தவறு.


இந்த வீடியோ வெளியிட்டபோதே, தினகரன் என்னை நேரில் அழைத்து பேசி இருக்கலாம். ஆனால் அவ்வாறு பேசவில்லை. டி.டி.வி. தினகரனை ஊர் ஊராக அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தியதே நான்தான்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையே, “புகழேந்தியின் பேச்சு, அவர் வேறு கட்சிக்கு செல்ல திட்டமிட்டு இருப்பதையே காட்டுகிறது” என்றார், தினகரன் கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான வெற்றிவேல்.


ஆனால் வெற்றிவேலுவும் எப்போது வேண்டுமானாலும் தினகரன் கட்சியைவிட்டு வெளியேறலாம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Similar News