“தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம்” - ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ஜெயக்குமார்!!
“தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம்” - ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட அமைச்சர் ஜெயக்குமார்!!
சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழை வைத்து வியாபாரம் செய்து பிழைக்கும் குடும்பம் தி.மு.க. தி.மு.க தமிழை வளர்த்ததா? அறிவியல் தமிழை ஜெயலலிதா கொண்டு வந்தார். 8-ஆம் உலகத் தமிழ் மாநாட்டை ஜெயலலிதா நடத்தினார்.
உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை ஜெயலலிதா நிறுவினார். தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தை எம்.ஜி.ஆர் அமைத்தார்.
தி.மு.க தமிழுக்கு ஒரேயொரு செம்மொழி மாநாடு நடத்தியது. செம்மொழி மாநாடு, குடும்ப மாநாடு. குடும்பத்தில் உள்ளவர்களை முன்னே அமரவைத்து, உலகம் முழுவதும் திரையில் காண்பித்ததுதான் மிச்சம். அதனால் ஒரு பயனும் இல்லை.
இன்றைக்கு கணினித் தமிழ் வளர்ந்திருப்பது ஜெயலலிதா போட்ட விதையால்தான். தமிழுக்கு உண்மையாகத் தொண்டாற்றக்கூடிய இயக்கம் அ.தி.மு.க. தமிழை வைத்து வியாபாரம் செய்துவிட்டு, தமிழுக்கு நாங்கள்தான் பற்றாளன் என்கிறது தி.மு.க. தமிழுக்குத் துரோகம் செய்தது தி.மு.க.
ரயில்வேயில் இப்போது நடப்பது பதவி உயர்வுக்கான தேர்வு. புதிதாகப் பணிக்குத் தேர்ந்தெடுத்தால், அதற்கு மாநில மொழியில் எழுத விருப்பம் தெரிவிக்கலாம். 1996-2001 ஆட்சிக்காலத்தில் தி.மு.க மாநிலத்திலும், காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும் ஆட்சி புரிந்தது.
2006-2011 காலத்திலும், தி.மு.க மாநிலத்திலும், காங்கிரஸ் மத்தியிலும் ஆட்சி செய்தது. அந்த சமயத்தில் இத்தேர்வை மாநில மொழிகளில் நடத்த என்ன நடவடிக்கைகளை தி.மு.க எடுத்தது? அதற்கு ஸ்டாலின் பதில் சொல்லட்டும்.
இது ஊரை ஏமாற்றும் செயல். வானத்திலிருந்து குதித்தது போன்றும், தமிழக மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்றும் “தமிழ், தமிழ்” என்கின்றனர். தமிழுக்கு எந்த நிலையிலும் அழிவு இல்லை. தமிழ் இன்னும் வளரும். அதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் தி.மு.கவால்தான் தமிழுக்கு பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.