2-வது மனைவியை சுட்டுக்கொல்ல முயன்ற திருவாரூர் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில்!
2-வது மனைவியை சுட்டுக்கொல்ல முயன்ற திருவாரூர் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ.வுக்கு 3 ஆண்டு ஜெயில்!
திருவாரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ அசோகன். இவர் சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனது 2-வது மனைவி ஹேமா, மகள், மகன் மற்றும் மனைவியின் தாயாருடன் வசித்து வந்தார். 2015-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி அசோகன், வீட்டில் மது போதையில் இருந்துள்ளார். அப்போது அவரது மனைவி ஹேமா தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றவே, கைகலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அசோகன், மனைவி ஹேமாவையும், அவரது தாயாரையும் வீட்டைவிட்டு துரத்தினார். அவர்கள் வெளியேற மறக்கவே, அசோகன் தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஹேமாவை நோக்கி 2 முறை சுட்டார். இதில் அவர் அதிர்ஸ்டவசமாக உயிர் தப்பினார்.
இதனால் நிலைகுலைந்து போன ஹேமாவும், அவரது தாயாரும் அங்கிருந்து தப்பி வெளியேறி, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து திருவாரூர் திமுக முன்னாள் எம்எல்ஏ அசோகன் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. திருவாரூர் முன்னாள் திமுக எம்எல்ஏ அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.