பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை - இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான மிக உயரிய சிவில் விருதை நிறுவியது மத்திய அரசு.!
பிரிவினை என்ற பேச்சுக்கே இடமில்லை - இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான மிக உயரிய சிவில் விருதை நிறுவியது மத்திய அரசு.!
இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பதற்கான மிக உயரிய சிவில் விருதை சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் மத்திய அரசு நிறுவியுள்ளது. இந்த விருது தொடங்கப்படுவதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் 20.09.2019 அன்று வெளியிட்டது.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்துதல், வலுவான, ஒற்றுமையான இந்தியா என்ற நெறியை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பங்களிக்கும், உத்வேகம் ஏற்படுத்தக் கூடிய பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது நிறுவப்பட்டுள்ளது. தேசிய ஒருமைப்பாட்டு தினம், அதாவது சர்தார் பட்டேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி இந்த விருது அறிவிக்கப்படும்.
இந்த விருது, குடியரசுத் தலைவர் தமது முத்திரை மற்றும் கையொப்பமிட்டு வழங்கும் பத்திரத்தின் மூலம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் போது வழங்கப்படும்.
விருது பெறுவோரை தெரிவு செய்வதற்கென குழு ஒன்றை பிரதமர் அமைப்பார். இதில் அமைச்சரவைச் செயலாளர், பிரதமரின் முதன்மைச் செயலாளர், குடியரசுத் தலைவரின் செயலாளர், உள்துறைச் செயலாளர் ஆகியோருடன் பிரதமர் தேர்ந்தெடுக்கும் 3 பிரபலமான நபர்களும் உறுப்பினர்களாக இடம் பெறுவார்கள்.
இந்த விருதுடன் பதக்கமும், பாராட்டுப் பத்திரமும் வழங்கப்படும். ரொக்கம் ஏதும் இதில் இடம் பெறாது. ஆண்டுக்கு 3-க்கு மேற்பட்ட தேசிய ஒற்றுமை விருதுகள் வழங்கப்பட மாட்டாது. நாட்டின் அனைத்து குடிமக்களும் இந்த விருது பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர்.
ஒவ்வொரு ஆண்டும் விருதுக்கான விண்ணப்பங்களை உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளத்தின் மூலம் அனுப்ப வேண்டும். இந்திய குடிமக்கள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், மத்திய அரசு அமைச்சகங்கள் உள்ளிட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்புகள், விண்ணப்பதாரர்களை பரிந்துரை செய்யலாம்.