கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை ரிசர்வ் வங்கிக்கு வழங்குங்கள்! ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர் மத்திய அரசிடம் கோரிக்கை!
கூட்டுறவு வங்கிகளை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை ரிசர்வ் வங்கிக்கு வழங்குங்கள்! ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர் மத்திய அரசிடம் கோரிக்கை!
அனைத்து நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளையும் ஒழுங்குபடுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரங்களை வழங்குமாறு ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர் சதீஷ் மராத்தே மத்திய அரசாங்கத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை அளித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு நகர வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளின் நிர்வாக அதிகாரம் மாநில அரசுகளிடமே உள்ளன. கூட்டுறவு சங்க தேர்தல்கள் மூலம் அரசியல்வாதிகளும், அரசியல் செல்வாக்குமிக்க உள்ளூர் பிரமுகர்களும் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை கைப்பற்றுகின்றனர்.
இதனால் பெரும்பாலான வங்கிகளில் ஊழல், நிதி மோசடி நடைபெற்று இலட்சக்கணக்கான பொது மக்களின் வைப்புத் தொகையை திருப்பித் தராத நிலையில் தள்ளப்பட்டுள்ளன. பெரும்பாலான வங்கிகளின் சேவையில் முன்னேற்றமில்லை. நிர்வாக திறமையின்மையால் பெரும்பாலான வங்கிகள் நஷ்டத்தில் நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கிகளில் நடைபெற்ற ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி இதற்கு உதாரணமாகும். இந்த வங்கிகளின் கிளைகளில் வைப்புத் தொகையாளர்கள் தங்கள் வைப்புத்தொகையை திரும்பக் கேட்டு ஆங்காங்கு போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம் மற்றும் மகாராஷ்டிரா காவல்துறை, பொருளாதார குற்றப்பிரிவு (ஈ.ஓ.டபிள்யூ) ஆகியவை வைப்புத்தொகையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க விரைவாக நடவடிக்கை எடுத்தன.
நாடெங்கும் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த புகார்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் “அனைத்து நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளையும் ஒழுங்குபடுத்த இந்திய ரிசர்வ் வங்கிக்கு முழு அதிகாரத்தையும் வழங்குமாறு ரிசர்வ் வங்கியின் மத்திய வாரிய இயக்குநர் சதீஷ் மராத்தே கேட்டுக் கொண்டார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், கூட்டுறவு வங்கித் துறைக்கு ஒரு பார்வை ஆவணம் மற்றும் வழிகாட்டும் திட்டத்தை தயாரிக்க பரந்த அடிப்படையிலான குழுவை அமைக்க வேண்டும். இந்த குழுவில் இந்திய ரிசர்வ் வங்கி, நிதி அமைச்சகம், வேளாண் அமைச்சகம் மற்றும் குறைந்தது இரண்டு சிறந்த கூட்டுறவு அதிகாரிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மராத்தே சமீபத்தில் சித்தராமனுடனான சந்திப்பின் போதும் இந்த விஷயங்களையும் எழுப்பினார்.