கேரளாவில் கடும் மழை சேதம்: சேதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதா பிணராயி அரசு?
கேரளாவில் கடும் மழை சேதம்: சேதத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டதா பிணராயி அரசு?
கேரளாவின் வரலாற்றில் 1924-ஆம் ஆண்டு, 61 நாட்களில் பெய்த கன மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டது. அதன் பிறகு 94 ஆண்டுகள் பெரிய அளவில் மழை சேதம் ஏற்பட்டதில்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு (2018) மழையினால் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த சேதமானது 1924-ஆம் ஆண்டு ஏற்பட்ட சேதத்தைவிட 30 சதவீதம் அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டு மழைக்கு 373 பேர் பனியானார்கள். கிட்டத்தட் பாதி கேரளா அழிந்தது போல் மிகப்பெரிய சேதத்தை கேரளா சந்தித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் கடும் மழையினால் கேரளா மாநிலம் மீண்டும் கடும் சேதத்தை எதிர் கொண்டு வருகிறது.
கேரள மாநிலத்தின் 8 மாவட்டங்களில் கடந்த 8-ஆம் தேதி கன மழை பெய்யத் தொடங்கியது. அதைத்தொடர்ந்து, அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. குறிப்பாக, மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா, வயநாடு மாவட்டம் புதுமலா ஆகிய கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன.
மலப்புரம் மாவட்டத்தின் கவலப்பரா கிராமம், 35 வீடுகளுடன் 65 பேர் மட்டும் வசித்த கிராமம் ஆகும். அங்கு 8-ஆம் தேதி இரவு ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, 60 பேர் உயிருடன் புதையுண்டு இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
12 அடி உயரத்துக்கு சேறும், சகதியும் மலைபோல குவிந்துள்ளது. வயநாடு மாவட்டம் புதுமலா கிராமம், தேயிலை தோட்டங்கள் நிறைந்த கிராமம் ஆகும். எண்ணற்ற வீடுகள், கட்டிடங்கள், கோவில், மசூதி ஆகியவை இருந்தன. நிலச்சரிவை தொடர்ந்து எல்லாம் தரைமட்டமாகி விட்டன.
மழை மற்றும் நிலச்சரிவுக்கு பலி எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இன்னும் ஏராளமானோரை காணவில்லை என்பதால், சாவு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.