குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூடுதலாக செலுத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரியை திரும்பப் பெறலாம்.!
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூடுதலாக செலுத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரியை திரும்பப் பெறலாம்.!
சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூடுதலாக செலுத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரியை திரும்பப் பெற சிறப்பு உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக, சென்னை புறநகர் ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரி ஆணையர் திரு. ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக செலுத்திய வரித் தொகையை திரும்பப் பெறுவதற்கான படிவங்களை சமர்ப்பிப்பதில் உள்ள சிக்கல் அல்லது பணத்தை திரும்பப் பெறுவதற்கு, குறிப்பிட்ட காலவரம்பிற்குள் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் குறித்து இந்த உதவி மையத்தில், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும் என ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரித் துறை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி ஆணையர் திரு. ஜி. ராஜா ஜெகதீசன் தலைமையிலான இந்த உதவி மையத்தில் அவருக்கு உதவியாக கண்காணிப்பாளர் திரு. ஏ. ராதா சங்கர பாரதி மற்றும் ஆய்வாளர் திரு. அபிஷேக்குமார் ஆகியோர் செயல்படுவார்கள்.குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூடுதலாக செலுத்திய ஜி.எஸ்.டி மற்றும் கலால் வரியை திரும்பப் பெறுவது தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து கோரிக்கைகள் குறித்து, 30 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்கும் இந்த சிறப்பு உதவி மையம், விண்ணப்பதாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பாலமாக செயல்படும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது குறைகள் குறித்து, 044-26142852, 044-26142782 ஆகிய தொலைபேசி எண்களையோ, அல்லது sevakendra-outer-tn@gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ தொடர்பு கொண்டு தீர்வு காணலாம் என திரு. ரவீந்திர நாத் கேட்டுக் கொண்டுள்ளார்.