இந்தோனேசியாவில் உள்ள பிரம்மாண்ட சிவன் கோவிலில், 1,163 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு அபிஷேக பூஜைகள்
இந்தோனேசியாவில் உள்ள பிரம்மாண்ட சிவன் கோவிலில், 1,163 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பு அபிஷேக பூஜைகள்
இந்தோனேசியாவின் மிகப்பெரிய ஹிந்து கோவிலாகவும், தென்கிழக்கு ஆசியாவில் இரண்டாவது பெரிய கோவிலாகவும் விளங்கும் பிரம்பானன் கோவிலில் நவம்பர் 12 ஆம் தேதி நடந்த சிறப்பு அபிஷேக பூஜையில் கலந்து கொள்ள இந்தோனேசியா முழுவதும் இந்துக்கள் பெருமளவில் திரண்டனர்.
இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவின் யோக்கியகர்த்தா மற்றும் கிளாடென் இடையே அமைந்துள்ளது பிரம்பானன் கோவில். 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில் திருமூர்த்தி(சிவபெருமான்) -க்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப்பெரிய கோவிலாகும். இந்த கோவில் வளாகத்தில் உள்ள மூன்று கோவில்கள் மூன்று ஹிந்து தெய்வங்களான பிரம்மா - விஷ்ணு - சிவனுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில்களை சுற்றியுள்ள இடங்கள், இராமாயணத்தை விவரிக்கும் பதிவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த கோவில் வளாகம், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக விளங்குகின்றது.
கடந்த 1,163 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த கோவிலை சுத்திகரிக்க பூஜைகள் நடைபெற்றுள்ளன.
இந்த கோவில் நிறுவப்பட்டபோது எழுதப்பட்ட கல்வெட்டின் படி, இந்த கோவில், கி.பி 856 நவம்பர் 12 அன்று நிறுவப்பட்டு, கோவிலை சுத்திகரிக்க சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றுள்ளன. எனவே, கோவில் நிறுவப்பட்டதை நினைவு கூறும் அடிப்படையில், இந்த சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்றுள்ளது என்று அபிஷேக பூஜை நிகழ்த்திய குழுவின் உறுப்பினர் அஸ்ட்ரா தனயா கூறினார்.
பிரம்பானன் கோவில் விழா நவம்பர் 9 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதூர் பியூனிங் என்ற முன்னோர்களிடமிருந்து அனுமதி கோரும் சடங்குடன் தொடங்கியது. போகோ கோவில் முதல் பிரம்பானன் கோவில் வரை உள்ள 11 புனித கிணறுகளில் இருந்து புனித நீரை கொண்டு கோவிலை சுற்றி பக்தர்கள் பிரதக்ஷிணம் செய்தனர். நவம்பர் 12 ஆம் தேதி அன்று முக்கிய பூஜைகள் நடைபெற்றன.
பிரம்பானன் கோவில் புனரமைப்பின் கதைகளை விவரிக்கும் பாரம்பரிய சிவகிரஹா நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா நிகழ்வு நிறைவுபெற்றது.