காசிக்கு சமமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் குளத்தில் கலந்து வரும் பாதாள சாக்கடை நீர் - பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம்!

காசிக்கு சமமான மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் குளத்தில் கலந்து வரும் பாதாள சாக்கடை நீர் - பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் சம்பவம்!

Update: 2019-08-28 08:26 GMT

நாகை மாவட்டம் மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தெப்பக்குளத்தில் கலந்து வரும் பாதாள சாக்கடை நீரை தடுத்து, குளத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்திருத்தலத்தில்தான் திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த முதலாம் திருமுறையின் 38வது திருப்பதிகம் 404 முதல் 414 வரையிலான திருப்பதிக பாடல்கள், மூன்றாம் திருமுறையின் 748 முதல் 758 வரையிலான பாடல்கள் மற்றும் ஐந்தாம் திருமுறையின் 387 முதல் 397 வரையிலான பாடல்கள் பாடப்பெற்றது. இத்தலத்தில் அம்பாள் மயில் வடிவில் வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை. காசிக்கு சமமான ஆறு திருத்தலங்களில் ஒன்று. ஒன்பது நிலையுள்ள ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் இடது புறம் குளம் உள்ளது.


இந்த தெப்பக்குளத்தில் கடந்த இரு தினங்களாக பாதாள சாக்கடை நீர் கலந்து வருகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் மயிலாடுதுறை நகராட்சியில் செயல்பாட்டில் இருக்கும் பாதாளசாக்கடைத் திட்டம் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.


நகர் முழுவதும் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் வெளியேறி வருவதாகக் கூறப்படும் நிலையில், கீழமடவிளாகம் பகுதியில் இருந்து வெளியேறும் பாதாள சாக்கடை கழிவு நீர் வடிகால் வழியாக குளத்தில் கலந்துவருகிறது.


கழிவுநீர் கலந்து வருவதால் குளத்தின் 4 படிகள் வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு, துர்நாற்றம் வீசி வருவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதால், தெப்பக்குளத்தில் நீராட தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்தம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Similar News